21.05.2026
தமிழீழ – தமிழக உறவுகளுக்கிடையில் பிளவுகளை உண்டாக்கும் வசவாளர்களை அடியோடு அகற்றுவதற்கு ஒன்றிணையுமாறு உலகத்தமிழர்களை வேண்டுகிறோம்.
திமுக, கொங்கிரசு கூட்டணியின் சதி உள்ளடங்கலான உலக நாடுகளின் வலைப்பின்னல் ஆதரவுடன், 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பெற்ற தமிழினப் படுகொலையானது உலகத்தமிழர்களின் அச்சாணியை உடைத்துவிட்டதென்றே கூறலாம். அதன்பின்னர் தமிழீழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் உளவியற் பலத்தை முழுதாக இழந்து நின்றனர்.
தேசியத்தலைவரின் அழைப்பையேற்றுத் தமிழீழம் வந்துசென்ற பல தலைவர்களுள், திரு.சீமான் அவர்களது முயற்சியினால் “நாம் தமிழர்” எனும் இயக்கம் உருவாக்கம்பெற்று, பின்னாளில் அது கட்சியாகக் கிளை பரப்பியது. “எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே” எனும் கோட்டொலியோடு, எள்ளளவும் விட்டுக்கொடுப்பின்றியும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை முழுமுதல் அடையாளமாகக்கொண்டும், எவருடனும் கூட்டணி இன்றியும் தனித்த அடையாளம் பெற்ற கட்சியாக நாம்தமிழர் கட்சி தேர்தல்களைச் சந்திக்கத்தொடங்கியது.
சமவேளையில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் தமிழின எதிரிகள் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். தமிழகத்திலிருந்த மாற்றுக்கட்சிகளும், புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களுமே தொடக்கத்தில் இந்த இழிசெயலைச் செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களது மேடைப்பேச்சுகளும், தமிழீழ மாவீரர்களுக்கு முதன்மை தந்து வணங்கும் செயற்பாடுகளும் தமிழின எதிரிகளுக்கு அச்சமூட்டின. எவ்வகையிலாயினும் நாம் தமிழர் கட்சியை அழித்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் உலகெங்கிலுமிருந்து பலர் இயங்கத்தொடங்கினர். குறிப்பாக; கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்; நாம் தமிழர் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும் வசைச் சொல்லாடல்களும் அதிகரித்திருப்பதை அவதானிக்கிறோம்.
தமிழீழத் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சிலேந்தியபடி , தமிழின அழிப்பிற்கெதிராகவும் உலக மயமாக்கலுக்கு எதிராகவும் நின்றியங்கும் ஒரேயொரு பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இன்று இயங்கிவருகிறது. நாம் தமிழர் கட்சியானது வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்ததை , இலட்சியத்திலும் கொள்கையிலும் தோற்றுப்போய்விட்டதாகப் பொருள்கொள்ளக்கூடாது. தமிழகத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைக் காசுகொடுத்து வாங்கவியலும். ஆனால் கொள்கையும் இலட்சிய உறுதியும் அவ்வாறல்ல; அவை தமிழர்களது மரபணுவிலிருந்தே தொடர்பவை ஆகும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான் அவர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து திரள்நிதி பெறுகிறார் என அவதூறுக்கூட்டங்கள் பரப்பும் குற்றச்சாட்டென்பது, ஒருவிதத்தில் சீமான் அவர்களது நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே வெளிப்படுகிறது . தமிழகத்தில் எத்தனையோ அரசியற்கட்சிகளிடமிருந்தும், அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் கோடிக்கணக்கில் அவரால் நிதி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தன் சொந்த மக்களிடமிருந்து கிடைக்கும் சொற்ப நிதியை வைத்துத் தனது அரசியற்பாதையைக் கட்டியெழுப்புவதென்பது உண்மையில் அசுர மனபலம் கொண்ட ஒருவராலேயே இயலும்.
அவ்வாறே, தவிபு கள் மீதான தடைக்குப் பின்னதாகவும், தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தபடியும், “தலைவர் பிரபாகரன் வாழ்க” என முழக்கமிட்டுக்கொண்டும், தமிழினப்படுகொலையை முரசறைந்தபடியும் அவர் வழிநடாத்துகின்ற அந்த மக்கள்திரள் என்றென்றும் தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமே என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
உளச்சுத்தியுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் நாம் தமிழர் கட்சியை நோக்குபவர்கள், நேர்மையான விமர்சனங்களைக் கூறுவார்களேயன்றி, ஒருபோதும் கட்சியின் இயங்குநிலைமீது அவதூறு பரப்பும் செயலைச் செய்யார். ஆனால், தமிழர்களாக இருந்தபடியே கவர்ச்சிக்கும் முறையற்ற வெற்றிகளுக்கும் பின்னால் ஓடுபவர்களும், தமிழின எதிரிகளின் அடிமைகளாக வாழும் நபர்கள் சிலருமாக , தமிழினத்தின் பலம் மேலெழும்போதெல்லாம் அதற்கெதிராகக் கூக்குரலிட்டு அவதூறுகளை வீசும் நடைமுறையைத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். இது காலம் காலமாக தமிழினத்தில் விளையும் ஓர் கேடு.
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழினத்தின் தலைவராக உளமார ஏற்று, அவ்வழியில் இயங்கிவருபவர்கள் அனைவருமாக ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி மீதான அவதூறுகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே தமிழினத்தின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் நபர்களின் உரையாடல்கள், அவதூறுக் காணொளிகள், அவ்வாறான காட்சிகளைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் இணையங்களைத் தவிர்ப்பதோடு மேற்குறித்த நபர்கள் தொடர்பிலான விழிப்புணர்வை சமூக வலைத்தளங்களினூடாக மக்களிடத்தில் பரப்பவேண்டுமெனவும் வேண்டுகிறோம்.
சிங்கள அரசினால் ஏவப்பட்டு தமிழினத்திற்கெதிராக இயங்குவோர், அதிகார மேலாண்மைகளிடம் கையூட்டுப் பெறுவோர், சாதி மதப் பிரிவினைகளை மக்களிடத்திலே தூண்டி பிளவுகளை உண்டாக்குவோர், தமிழ்த் தேசியப்பாதையில் இயங்குவோர் மீது அவதூறுகளைப் பரப்புவோர், நடிப்பது மட்டுமே நாட்டை ஆளப்போதுமானது என எண்ணுவோர் மற்றும் அவ்வாறானவர்களது கண்மூடித்தனமான இரசிகர்கள் என அனைவரையும் இனங்கண்டுகொள்வதோடு, அவ்வாறானவர்களிடமிருந்து உலகெங்கும் வாழும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் விலகியிருக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
பணிவன்புடன்
ஜெயந்தன்
அனைத்துலக ஒருங்கிணைப்பாளர்
அறிக்கை வடிவம் : PDF