தவிபு வினது தடையை நீக்குகிறோம் என மேற்குலகில் இதுவரைகாலமும் களமிறங்கிய பலர் நீதிமன்றுகளில் வைத்த வாதம் இரண்டே வகைதான்.
முதலாவது ;
There is no more தவிபு, So lift the ban. ( தவிபு இப்போது இல்லை, அதனால் தடையை நீக்குக)
இரண்டாவது;
The தவிபு has been destroyed. Then why should those who collected money be punished ?
(தவிபு அழிக்கப்பட்டுவிட்டதன் பின்னர், அவர்களுக்காக நிதி திரட்டியவர்கள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் ?)
மேற்கூறிய இரண்டு வாதங்களுமே தமிழர் இறையாண்மைக்கு இழுக்கை ஏற்படுத்துபவன. ஆயிரமாயிரம் மாவீரர்கள் சிந்திய குருதியின்மீது சேறை வாரி இறைத்த வாதங்கள் இவை. இவ்வாறான கீழ்த்தரமான வாதங்களை நிகழ்த்திவிட்டு, இதோ தடையை நீக்கிவிட்டோம் இனிமேல் நமது கொடி பட்டொளி வீசிப்பறக்கும் (கொடிக்கு எங்கேயும் தடையில்லை என்பது வேறு கதை) என மக்களுக்குக் கதையளந்து மார்தட்டிக்கொண்டார்கள்.
முதல்வகை வாதத்தை நோக்குவோம். தவிபு இப்போது இல்லை, ஆதலால் தடையை நீக்குக எனக்கோருவதன் மூலம் எதிர்த்தாக்கமுடைய இன்னோர் கேள்வியை / கருத்துருவாக்கத்தை இவர்களே உருவாக்கிவிடுகிறார்கள். அதாவது; தவிபு இப்போது இருந்தால் தடை சரியானதுதான் என்பதே அது. இவ்வாறான நுண்ணிய வார்த்தை விளையாட்டின் விபரீதத்தை உணராமல் , தம்முயிரைப் பணயம் வைத்துத் தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய புலிகளின் தியாகத்தைக் கிடங்கு தோண்டிப் புதைத்த மேற்குலவாழ் தமிழ் வித்துவான்கள், இன்னமும் தம்மை Diplomatics எனப் பீற்றிக் கொண்டு அலைவதுதான் கொடுமையிலும் கொடுமை.
இரண்டாவது வகை வாதமான; “தவிபு அழிக்கப்பட்டு விட்டார்கள், பின்பு எதற்காக தவிபு விற்கு நிதிதிரட்டியவர்களை மட்டும் தண்டிக்கவேண்டும்..” எனக் கேள்வியெழுப்புவதனூடாக, தவிபு இப்போது இருந்தால் அவர்களுக்காக நிதிதிரட்டியவர்களைத் தண்டிப்பதில் தவறில்லை என மறுதாக்கமுடைய இன்னோர் நச்சுக்கருத்துருவாக்கத்தை உருவாக்குவதுமட்டுமன்றி, நேர்த்தியாக இயக்கப்பட்ட நடைமுறையரசைப் புதைத்துவிட்டு, தவிபு வின் தலைமேல் எல்லாக் குற்றங்களையும் சுமத்தியபின், தம்மைக் காப்பாற்றிக்கொண்டு தப்பிஓடும் வித்துவான்கள் கூட்டம்.
இவ்விரண்டு கூட்டங்களும் சட்டம், வழக்கு, நீதிமன்று என வந்துவிட்டால் குப்புறப்படுத்துவிடுவார்கள். ஆனால் பொதுவெளியில் மக்கள் முன்னால் தேசியக்கொடியை ஏந்தி வீறுநடை போட்டுத் தமது சுதந்திர உணர்ச்சியைப் பீய்ச்சியடித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.
இந்த இரண்டு கூட்டங்களிலிருந்தும் முற்றாக விலகிநின்று, எதிர்வரும் 27.04.2022 அன்று முதன்முதலாக யேர்மனியில் நாதன்தம்பி என்ற ஈழத்தமிழர், தேசியத்தலைவரின் வழியைப் பின்பற்றித் தமது இறையாண்மை மிடுக்கை நீதிமன்றில் கீழ்வருமாறு நிலைநாட்டுகிறார்.
“தவிபு விற்கு நான் நிதி திரட்டியது உண்மையே. அவர்கள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் ஈழத்தமிழரின் பாதுகாவலர்கள்…”