இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் யேர்மன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள். எதிர்வரும் புதன்கிழமை, ஏப்ரல் 27, 2022, ஈழத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது Dusseldorf (Kapellweg 36) இல் உள்ள உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஈழத்தமிழர்கள் மீது விசாரணை நடைபெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டியமைக்காக இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் “பயங்கரவாதிகள்” என்று குற்றம் சாட்டப்பட்ட விசாரணையின் முதல் நாள் இதுவாகும்.
ஈழத்தமிழருக்கெதிரான தொடர்ச்சியான அடக்குமுறை, படுகொலைகள் மற்றும் பிற வன்முறைகளின் விளைவாக இலட்சக்கணக்கான தமிழர்கள் இறந்துள்ளனர், வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். பலர் சொந்த மண்ணைவிட்டு வெளியேறியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு, கடுமையான மனித உரிமை மீறல்களைச் செய்தபடியே சிங்கள அரசின் இராணுவம் போரை நடாத்தியது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடாத்தப்ப இனஅழிப்பினால் ஏறத்தாழ 70,000 தமிழர்கள் உயிரிழந்தனர். இன்றுவரை சிங்கள அரச அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அனைத்துலகச் சமூகம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு நீதியைக் கோரத் தவறிவிட்டது. ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றால் “No fire Zone” மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து அடையாளம் காட்டப்பட்டபோதும், சிறிலங்கா அரசானது தொடர்ச்சியாக திட்டமிட்ட குண்டுவீச்சுத்தாக்குதல்களை நடாத்தியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளை நகர்த்தி முக்கிய பங்காற்றிய முற்போக்கான நாடுகளில் யேர்மனியே முதன்மையானதாக இருந்தது. நோர்வேயைப் போன்றே, விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் சமவலுக்கொண்ட பேச்சுவார்த்தை பங்காளிகளாகக் கருதும் சமாதானக் கொள்கை அணுகுமுறையை யேர்மனி நீண்டகாலமாக ஆதரித்தது. எடுத்துக்காட்டாக, 2004 சுனாமி மீள்கட்டமைப்புப் பணிகளின்போது யேர்மனி வழங்கிய அபிவிருத்தி நிதியானது , விடுதலைப் புலிகள் தலைமையிலான நடைமுறையரசை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே வழங்கப்பட்டது
எவ்வாறாயினும், 2006 இற்கு முன்னர் நடுநிலை பேணிய ஐரோப்பிய ஒன்றியமானது, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய பாரிய அழுத்தத்தின் காரணமாக தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அத்தோடு புலிகளை “பயங்கரவாத அமைப்பாக” குறியிட்டுத் தடை செய்தது. பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்ற சமாதான முன்னெடுப்புகள் இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட, பயங்கரவாதம் என்ற சொற்றொடரால், உயிரிழப்புகள் பற்றித் துளியேனும் சிந்திக்காத மிருகத்தனமான இராணுவத் தலையீட்டிற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தை சிறிலங்கா அரசு பெற்றுக்கொண்டது. விடுதலைப் புலிகள் மீதான தடையினால் உருவான பேரழிவு விளைவுகளை ஐரோப்பிய ஒன்றியமும் யேர்மனியும் ஆராய்ந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் இப்போது தமிழீழச் செயற்பாட்டாளர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளனர் . யேர்மனிய அரசாங்கம் இலங்கையில் அமைதியைப் பேணுவதில் தனது சொந்த வரலாற்றுப் பங்கையும் அரசியல் பொறுப்பையும் இதன்மூலமாக இருட்டடிப்புச் செய்கிறது.
யேர்மனியின் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ள செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதக் குற்றவாளிகள் அல்ல, அவர்களும் அவர்களது உறவுகளும் ஓர் கொடூரமான இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள், இது இன்றுவரை தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பாகத் தொடர்கிறது. விடுதலைப் புலிகளிற்காக நிதிதிரட்டியமையானது பயங்கரவாத நடவடிக்கை அல்ல, மாறாக; சிறிலங்கா அரசால் திட்டமிடப்பட்ட பாரிய இனஅழிப்பு நடவடிக்கைகள், கொடூரமான போர், மற்றும் சிறிலங்கா அரசின் மனித உரிமைக் குற்றங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையே அன்றி வேறில்லை.
ஆதலினாலேயே; சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு – Bremen e.V. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிந்தனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்புகிறது. அத்துடன் இதற்கு ஆதரவாக அனைத்து ஐரோப்பிய மக்களையும், அமைதி மற்றும் நீதிக்கான சக்தியாக ஒன்றிணைந்து , பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் திட்டத்திற்கெதிராக ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறது!
இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐரோப்பிய ஒன்றியமானது தனது அமைதிக் கொள்கை அணுகுமுறைக்குத் திரும்பவில்லையென்றால், ஈழத் தமிழர்களுக்கு நீதியும் சுயநிர்ணய உரிமையும் சாத்தியமாவதை விரும்பவில்லை என்றே பொருளாகும். எனவே, அனைத்து முற்போக்குக் குரல்களையும் தெளிவான நிலைப்பாட்டுடன் எமது அறவழிப்போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாக்குவதற்குப் பதிலாக, புலிகள் மீதான தடை குறித்த முழுமையான விசாரணையை நாம் கோருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு: https://humanrights.de/4359
Düsseldorf உயர் நீதிமன்றத்தின் முன் கவனயீர்ப்பு நிகழ்வும் குறித்தநாளில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. (Kapellweg 36, அஞ்சல் குறியீடு 40221)
தொடர்புகளுக்கு:
தேவன் (தமிழ்): 0049 1521 6969449
விராஜ் மெண்டிஸ் (ஆங்கிலம்): 00491774062220
Deutsch : 004915776382029
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு – Bremen e.V (www.humanrights.de)