???? நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது
தவிபு விற்கு நிதிதிரட்டியது குற்றமல்ல, அது எனது உரிமை என நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனு மீதான விசாரணை அமர்வு – 10 இல், இம்மனுவிற்கான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
முதலில்; நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் இவ்வழக்கைத் தொடுத்ததற்கான அடிப்படைக்காரணங்களைப் பதிவுசெய்தல் முக்கியமானது.
????தவிபு களினது ஆயுதப்போராட்டமே தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பைத் தடுத்துநிறுத்திய தவிர்க்கமுடியாத காரணி என்பதை நிறுவுதல்
????தமிழர்கள் மேற்கொண்ட அறவழிப்போராட்டங்களின் தோல்வியினாலேயை தவிபு தோன்றியது என்பதை நிறுவுதல்
????திருகோணமலைத் துறைமுகம் மீதான அமெரிக்காவின் கழுகுப்பார்வையே 2009 இல் தமிழின அழிப்பு வேகமாக நடாத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்பதை நிறுவுதல்.
????தவிபு களையும் அவர்களது தலைமையையும் ஏற்று இயங்கிய ஈழத்தமிழர்களது செயற்பாடுகள் நியாயமானவை என்பதை நிறுவுதல்.
????தமிழினப்படுகொலையை நீதிமன்றில் நிறுவுதல்
????தவிபு களின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையே தமிழின அழிப்பை வேகமாக நடத்திமுடிக்க அனுசரணை வழங்கியது என்பதை நிறுவுதல்
இதுவரைகாலமும் நடைபெற்ற தவிபு களிற்கு நிதிதிரட்டியமை தொடர்பான வழக்குகளில், மேற்கூறிய காரணங்களை நிறுவுவதற்கு அச்சமுற்று, தமிழீழப்போராட்டமானது தீவிரவாதம் என உலக அரசுகள் தெரிவித்த குற்றங்களை ஏற்று மண்டியிட்டு மன்னிப்புக்கோரியவர்கள் அனைவருமே பயத்தின் நிமித்தமே இதனைச் செய்தார்கள் என்பதை நாதன்தம்பியும் ஆனந்தராசா அவர்களும் நீதிமன்றில் வழங்கிய இறுதிவாக்குமூலத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார்கள்.
இங்கே இருவழிகள் உள்ளன. முதலாவது; தவிபுகளிற்கு நிதி திரட்டியது குற்றமென ஏற்றுக்கொண்டு மண்டியிட்டு மன்னிப்புக்கோரி, அவர்கள் தரும் தண்டனையைக் குறைக்குமாறு இறைஞ்சுதல். இதுவே இவ்வளவு காலமும் ஐரோப்பியநாடுகளில் நடந்தேறியது. தவிபுகளிற்கு நிதிதிரட்டியவர்களே அதைக் குற்றமென ஏற்றுக்கொண்டதால், தமது முடிவுகளில் தவறில்லை என்பதுவே இதுவரை காலமும் நீதிமன்றங்களின் முடிவாகும்.
இரண்டாவது; தவிபுகளிற்கு நிதி திரட்டியது குற்றமல்ல, அது எமது உரிமை என வாதிட்டு, எமது தமிழீழப்போரின் அவசியத்தை நிலைநாட்டுதல். இவ்வழியில் நீதிமன்றில் வாதாடினால் கடூழியச் சிறையும், பெருந்தண்டப்பணமும் செலுத்தவேண்டிவரலாம் என்ற மிரட்டல்களுக்கு அஞ்சாது நின்று, தமது வாழ்வைப் பணயம் வைத்துப் போராடிய நாதன்தம்பியும் ஆனந்தராசா அவர்களும் முதன்முறையாக நிகழ்த்திய வரலாற்றுப் போராட்டம் இதுவாகும். நீதிமன்றங்கள் தரும் தண்டனைக்கு அஞ்சி, எமது போராட்ட மேன்மையையும், தலைவரின் வழிநடத்தலையும், மாவீரர்களின் தியாகத்தையும், தமிழீழ மக்களின் உளவுறுதியையும் சிதைத்தழிக்கும் செயற்பாடுகளுக்குத் துணைபோகமாட்டோம் என்பதே நாதன்தம்பியும் ஆனந்தராசாவும் உலகிற்கு அறிவித்த மேன்மைமிகு செய்தியாகும். சுருங்கக்கூறின்; நீ தரும் தண்டனையால் எனது இலட்சிய உறுதியைத் தகர்க்க முடியாது என்பதுவே அதுவாகும்.
????இரண்டுமணிநேரமாகநீதிபதி வழங்கிய தீர்ப்பின் சுருக்கம்:
ஆரம்பகாலந்தொட்டு தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திவரும் அடக்குமுறைகளை அறிந்தோம். ஆனால் தவிபு கள் தமது போரை நடாத்திய சில வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளவியலாது. 2006 – 2009 வரை தவிபுவானது ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் நிதிதிரட்டியதே இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றமாகும். அதன் அடிப்படையில் நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகிய இருவருக்குமாக ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனாலும் அவர்களது நியாயங்களையும் செயற்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இருவரையும் 3 வருட நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்கிறேன். (முழுமையான தீர்ப்பு விரைவில் வெளியிடப்படும்)
நாதன்தம்பியும் ஆனந்தராசாவும் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. மண்டியிட்டு மன்னிப்புக்கோரவில்லை. மாவீரர் நாளை நடாத்துவது மாவீரரின் பெற்றோர்களுக்காக மட்டுமே எனப் பொய்கூறவில்லை. கரும்புலிகள் யாரென்பது எமக்குத் தெரியாதெனக்கூறி கரும்புலிகளது தியாகத்தைக் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக; தவிபுகளே எமது இனத்தின் பிரதிநிதிகள் என்பதை இந்த நீதிமன்றில் ஆணித்தரமாகப் பதிவுசெய்தார்கள். தண்டனைகளுக்கு அஞ்சி, எமது இனத்தின் போராட்ட மேன்மையான தேசியத்தலைவரையும், தவிபு வினையும், தமிழீழ மக்களின் தியாகங்களையும் குழிதோண்டிப்புதைத்துவிடக்கூடாது என்பதே நாதன்தம்பியும் ஆனந்தராசா அவர்களும் வெளிப்படையாகச் சொல்லும் சேதியாகும்.
நாதன்தம்பியும் ஆனந்தராசா அவர்களும் நிறந்திருக்கும் இப்புதிய பாதை இனிவரப்போகும் சந்ததிக்கு எழுச்சிமிகுந்ததாக அமையும். எல்லா ஆட்டமும் ஆட்டமல்ல. யார் ஆட்டத்தைச் சரியாக ஆடுகிறார்களோ அவர்களே “ஆட்டநாயகர்கள்”.. எனப்படுவர். மண்டியிட்டுக் கெஞ்சிக்கூத்தாடி எம்மினத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களை வேண்டுமானால் “ஓட்டநாயகர்கள்” எனலாம்.
வரலாறு எப்போதும் “ஆட்டநாயகர்களையே” நினைவில் வைத்திருக்கும்.
விரைவில் அடுத்தகட்ட நகர்வு அறியத்தரப்படும்.