26.11.2025 அன்று தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள் (71) விழா யேர்மனியின் Soest நகரத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தமிழீழத்தேசியக்கொடியினை திரு.மதிமாறன் அவர்கள் ஏற்ற; பொதுச்சுடரினை இளையோர் ஏற்றினர்.
தேசியத்தலைவர் பற்றிய கவிதைகள், பாடல்கள் இடப்பெற்றன. சிறப்புரையினை திரு.மதிமாறன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து; தேசியத்தலைவரிடம் பலதரப்பட்ட ஊடகவியாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவரளித்த பதில்களும் சிறப்புக் காணொளியாகத் தொகுக்கப்பட்டுத் திரையிடப்பட்டது. (அவற்றில் முதன்மையானவையை எழுத்தில் தருகிறோம்)
கேள்வி : தமிழின அழிப்பு நடைபெற்ற 1983 ஆம் ஆண்டில், அதற்குரிய காரணியாக திருநெல்வேலித் தாக்குதல் சொல்லப்படுகிறதே ?
தேசியத்தலைவர் பதில்: அப்படியென்றால் அதற்கு முன்பதாக 1956, 1958, 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழினப்படுகொலைக்கு என்ன காரணங்களைச் சொல்லமுடியும்? . இது வேண்டுமென்ற சிங்கள ஆட்சியாளர்கள் பரப்பிவரும் கதைகள். நாம் திருப்பி அடிக்கும்வரை அவர்கள் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை. நாம் ஓடிக்கொண்டே இருந்தால் அவர்கள் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆதலினால் தாக்குவது ஒன்றே எம்மைக்காப்பாற்றக்கொள்ள ஒரே வழியாக இருந்தது.
நாம் பரிதாபத்திற்குரியவர்களாக அலைவதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பதால் எவ்வித நன்மையையும் கிட்டப்போவதில்லை. நாம் போராடியாகவேண்டும்.
கேள்வி : குட்டிமணி, தங்கதுரை கைது தொடர்பில் அப்போதைய உங்கள் நிலைப்பாடு என்ன ?
தேசியத்தலைவர்: குட்டிமணி, தங்கதுரை அவர்கள் கருத்துமுரண்பாடு காரணமாக வெவ்வேறு இயக்கங்களில் செயற்பட்டிருந்தாலும், அவர்கள் மீது எமக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர்கள் கைது செய்யப்பட்ட வேளை, அவர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் நாமும் உதவிக்கு வருவதாகச் சொல்லியிருந்தோம்.
கேள்வி : இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை முயற்சிகள் பற்றி (2003) உங்கள் நிலைப்பாடு என்ன ?
தேசியத்தலைவர் : இன்று கூட மேற்குலகு நம்மை நாடி வருவது ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தருவதற்காக அல்ல.சிறிலங்கா என்ற நாடு உடைந்து பிரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் ஓடி வருகிறார்கள். அவர்கள் என்றுமே எம்மீது கரிசனை உடையவர்கள் அல்லர். நாம் பலமாக இருப்பதால் ஓடிவருகிறார்கள். எம்மிடம் பலம் இல்லையென்றால் அவர்கள் எம்மை ஒரு பொருட்டாகக் கருதப்போவதில்லை.
கேள்வி : உங்களுக்கு கோபம் வரவைக்க என்ன செய்யவேண்டும் ?
தேசியத்தலைவர் : என்னுடைய இனத்திற்கு எதிரியாக இருந்துபாருங்கோ, அப்ப வரும் எனக்குக் கோபம், (சிரிப்புடன்) அப்ப நீங்கள் என்ர கோபத்தைப் பாப்பியள்.
நிகழ்வின் இறுதியில்; உணவு பரிமாறப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது. நிகழ்வினை திரு பாபு அவர்கள் தலைமையில் Soest வாழ் ஈழத்தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.







1 thought on “தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா -Germany”
Beautiful, I love the work of The Voice of Tamil Global Rights, a credit to the people of Tamileelam. The most serious and dedicated Tamil Diaspora group since Kittu ran the London office. An honour to work with you, thank you from Mrs Karen Mendis