எமதுமண்ணில் யாருமற்றவர்கள் என எவரும் இருக்கக்கூடாது. இவர்களை மண்பற்றும், மக்கள் பற்றும் கொண்ட தமிழீழத்தின் எதிர்காலச் சிற்பிகளாக உருவாக்கவேண்டும் என்ற தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் உன்னத நோக்கின் அடிப்படையில் 22.10.1991 அன்று உருவாக்கப்பட்டதே செஞ்சோலை சிறுவர் இல்லம்.
இந்தச் செஞ்சோலை இல்லம் ஒரு புதிய புரட்சிகரக் கல்வியின் பரிசோதனைக் களமாக அமையவேண்டும் என்னும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இதற்கமைய முதன்முதலில் செஞ்சோலை மகளிர் இல்லமானது யாழ். சண்டிலிப்பாயில் 1991 ஆம் ஆண்டு 23 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்டது. அந்நாள் தொடங்கி, 2008 இறுதிப்பகுதி வரை 10 இற்கும் மேற்பட்ட இடப்பெயர்வுகளைச் சந்தித்தபோதிலும் இறுதிவரை சிறப்பாகச் செயற்பட்டுவந்தது.

செஞ்சோலை பிள்ளைகளுக்காகவென 10.07.1991 அன்று செஞ்சோலை மகளிர் வித்தியாலயம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை தொடங்கப்பட்டது. பாடசாலைக் கல்வி நிறைவுபெற்ற பின்னர் பிள்ளைகளுக்குத் துறைசார் கல்வி பயிற்றுவிக்கப்படும். தையல், மரவேலை, விவசாயம், மனையியல், உடற்கல்வி, நிழற்படக்கலை, ஒளிப்பதிவு ஒலிப்பதிவு, கைவேலை, புத்தகம் கட்டுதல், தட்டச்சு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இவற்றில் பயிற்சி பெற்ற பிள்ளைகள், எமது அனுமதியுடன் உறவினர்களிடம் சென்றவர்கள் அல்லது எம்மால் திருமணம் செய்துவைக்கப்பட்ட பிள்ளைகள் எம்மிடம் பெற்ற தொழிற்பயிற்சியைக் கொண்டு வருவாயைப் பெறும் வழிவகை உருவாக்கப்பட்டது.
அவ்வாறே கலைத்துறையிலும்; நடனம், தமிழிசை,சித்திரம், கராத்தே தற்காப்புக்கலை, சாரணியம், வாத்தியங்கள் இசைத்தல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் கண்ணன் மாஸ்ரர், ஆசிரியர் முரளி, சோதி மாஸ்ரர், கோபி, சச்சி மாஸ்ரர், ஆகியோரும், கண்ணன், ஓவியநாதன், இளங்கோ, டொமினிக் ஜீவா, ஆகியோரும் செஞ்சோலை பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாகக் கற்பித்தனர்.

செஞ்சோலையின் செயற்பாடுகள் முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பொறுப்பேற்று நடாத்தப்பட்டது. அதேவேளை புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் வசித்துவரும் உறவுகளும் உதவிகளை வழங்கினர். செஞ்சோலை 1991 ஆம் ஆண்டு சண்டிலிப்பாயில் தொடங்கப்பட்டு, அடுத்தவருடமே மானிப்பாய்க்கு இடம்பெயர்ந்தது. பின்னர் அங்கிருந்து கோப்பாய்க்கு இடம்பெயர்ந்து, கோப்பாயிலிருந்து அரியாலை, அரியாலையிலிருந்து மட்டுவில், அங்கிருந்த கிளிநொச்சி, பின்னர் மல்லாவி, அங்கிருந்து வடகாடு, அங்கிருந்து புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை, அங்கிருந்து கைவேலி, பின்னர் வள்ளிபுனம், இறுதியாக கிளிநொச்சி, அங்கிருந்து மீளவும் புதுக்குடியிருப்பு வரை செஞ்சோலை நகர்ந்தது.

1996-1998 வரை மரங்களின் கீழும், குழைமப்பாய்க் கொட்டில்களின் கீழும் வகுப்புகளை நடத்தினோம். 1993-1994 காலப்பகுதியில் செஞ்சோலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதீத உயரத்தை எட்டியது. செஞ்சோலை பிள்ளைகளை இறுதியில் புலிகள் போராட்டத்தில் இணைத்துவிடுவார்கள் எனச் சொல்கிறார்களே என தலைமை ஆசிரியர் மனோரஞ்சித மலர் அவர்களிடம் கேட்டபொழுது; “இது கட்டப்பட்ட பொய்க்கதையாகும். ஒரு குழந்தையை 02 மாதங்களில் தொடங்கி வளர்த்தெடுத்து, அப்பிள்ளை 18 வயது ஆகும்போது எமது போராட்டம் எந்த நிலையில் இருக்குமென்பது யாருக்கும் தெரியாது. அதைவிட ஒரு பிள்ளைக்கான செலவீனம் மிக அதிகம். போராளியாக மாற்றத்தான் பிள்ளைகளை வளர்த்தோம் என்றால், நாம் இவ்வாறு தனித்த வாழ்விடம், தனித்த கல்வி, என அவர்களுக்குச் செலவிடத் தேவையில்லை. அவர்களை புலிகளின் முகாமிலேயே வளரவிடலாம்” எனக்கூறினார்.
அதேபோல; உறவினர்களைக் கண்டடைந்து மீள நாம் அவர்களுடன் அனுப்பிய பிள்ளைகள் ஏறக்குறைய 100 இற்கு மேற்பட்டோர் உள்ளனர். நாம் இவர்களை போராட்டத்தில் இணைக்கும் எண்ணத்துடன் இருந்திருந்தால், அவர்களை மீளவும் பெற்றோர்/உறவினர்களுடன் இணைக்கமாட்டோம் அல்லவா..? இது ஒரு தவறான தகவல். 2004-2006 காலப்பகுதியில் 239 பிள்ளைகள் செஞ்சோலையில் வாழ்ந்தார்கள். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் ஏழு பேரும், 07-12 வயதுப்பிரிவு 62 பேரும், 18 வயது வரையானவர்கள் 120 பேரும், 19 வயதிற்குமேற்பட்டவர்கள் 50 பேருமாக செஞ்சோலை இயங்கியது.
14.08.2006 அன்று செஞ்சோலை இல்லம் மீது கிபிர் விமானங்கள் நடாத்திய குண்டுவீச்சில் 61 பிள்ளைகளை இழந்து தமிழீழம் கண்ணீர் வடித்தது. 2009 ஆம் ஆண்டு எமது தமிழீழநாட்டின் மீது படையெடுப்பு நிகழ்த்தப்பட்டு எதிரிகளாலும், உலக வல்லாதிக்கங்களாலும் அழிக்கப்பட்டு, தமிழினப்படுகொலை நிகழ்ந்தேற, செஞ்சோலை இல்லமும் அழிந்துபோனது.


