“யாருமற்றவர்களாக எவருமில்லை” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையின் அடிப்படையில், செஞ்சொலையைத் தொடர்ந்து “நீங்கள் எல்லோரும் தமிழன்னையின் செல்லக்குழந்தைகள்” என ஆதரவற்ற சிறுவர்கள் அரவணைக்கப்பட்டு, 01.11.1993 அன்று காந்தரூபன் அறிவுச்சோலை உருவானது.
காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக யார் காரணம் ?
காந்தரூபனை வளர்த்த தந்தை இவ்வாறு கூறுகிறார். “ஒருநாள் தொழிலுக்குப் போறதுக்கான ஒழுங்குகளைப் பார்க்க நான் கடற்கரைக்குப் போனன். ஊர்ச்சிறுவர்களோட புதுசா ஒரு பெடியனும் நிண்டான். மெலிஞ்ச உடம்போட, கிழிஞ்ச பெனியன் போட்டுகொண்டு நிண்டான். “நீ ஆர் தம்பி.?” எண்டு கேட்டன். அவனுக்கு இரண்டு கண்களும் கலங்கிப்போச்சுது.
“எனக்கு ஒருத்தருமில்லை. அம்மா, அப்பா எல்லாரும் செத்துப் போச்சினம் .. சொந்தக்காரர் யாருமில்லை.., உப்பிடியே நடந்து கடற்கரைக்கு வந்து சேர்ந்தன்” எண்டான். அப்பிடியே வீட்டை கூடியந்து வளர்த்தன் தம்பி .. என்கிறார். நானும் கடற்புலியளுக்கு ஒட்டியாய் போறனான். வண்டியில நாங்கள் பொடியளையோ, சாமானுகளோ கொண்டுவாற நேரம் Navyயால கலைபட்டிருக்கிறம். அந்தக்கப்பல் தான் நாங்கள் பறிகொடுத்த அத்தனை பெடியளின்ர
சாவுக்கும் காரணம்…”
அந்தக்கப்பலைப் பெடியள் அடிக்கப்போறாங்களாம் எண்டு கேள்விப்பட்டேன். அதில என்ர பெடியனும் ஒராளாம் எண்டு அறிஞ்சன். அவரது நா தழுதழுத்தது. அவனை எந்தக் கடற்கரையில கண்டு தூக்கிக்கொண்டு போனனோ, அதே இடத்தில இருந்துதான் அவன் போனான். கரும்புலிப் படகில ஏறமுதல்; என்னைக் கட்டிப் பிடிச்சு மாறி மாறி கன்னத்தில கொஞ்சினான். தன்ர தகப்பனின் பெயர் தெரிஞ்சிருந்த போதும், என்ர பெயரைத்தான் “அப்பா” எண்டு சொல்லிப் பதிஞ்சிருக்கிறான். கண்களைச் சால்வையால் ஒற்றிக்கொண்டார் அவர்.
கரும்புலி மேஜர் காந்தரூபன்
1987 ஆம் ஆண்டு; காலப்பகுதியில் தொண்டைமானாறு சிங்கள இராணுவ முகாமைச் சுற்றி காந்தரூபன் கடமையில் இருந்தான். ஒருநாள் அங்கிருந்து முன்னேறிய இராணுவத்தினரோடு மோதியதில், அவன் ஒரு கட்டத்தில் இராணுவத்தினரிடம் அகப்படும் சூழ்நிலை வரவே; குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால் நண்பர்களால் மீட்கப்பட்டு, பண்டுவம் நடந்தபோதும், நஞ்சு அவர் உடலைச் சிதைத்துவிட்டிருந்தது. அவர் நிறையுணவு உண்ணவேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

1988-1989 காலப்பகுதியில் மணலாறில் தலைவருக்கு அருகில் காந்தரூபன் நின்றான். அவன் தொடர்ந்து பசுப்பால் அருந்தவேண்டும் என்பதற்காக, தலைவர் பசுமாடு ஒன்றை வெளியிலிருந்து தருவித்தார். தலைவரின் துணைவியார் ஒரு தாயைப்போல அவனைக் கவனித்தார். திடீரென ஒருநாள்; “அண்ணை என்னைக் கரும்புலிகளின் சேர்த்துக்கொள்ளுங்கோ”.. என்றான். அதோடு இன்னொரு விருப்பத்தையும் சொன்னான்.”…உங்களுக்குத் தெரியும் அண்ணை, நானொரு அநாதை. என்னை ஒரு அம்மாவும் அப்பாவும் எடுத்து வளர்ந்தவை. அதுக்குப்பிறகு நீங்கள் என்னை வளர்த்தியள். இப்ப நான் உங்களிட்ட ஒண்டு கேக்கப்போறன், நீங்கள் அதைச் செய்து தரவேணும்..” என்றான்.
அவன் சொல்வதைத் தலைவர் அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். “என்னைப்போல எத்தனையோ பொடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள். ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியுறார்கள், நீங்கள் என்னை அன்போட பார்த்ததைப் போல அப்பிடியான பிள்ளைகளையும் வளர்க்கவேணும். அவங்களை படிக்கச் வைக்கவேணும், அதற்கென்று ஒரு இடத்தை அமைத்து, அவர்களை வளர்த்தெடுத்து,ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி விடுங்கோ…”
அவன் கூறியதனைத்தும் தலைவரின் இதயத்தைத் தொட்டது. 10.07.1990 அன்று “எடித்தாரா” கட்டளைக்கப்பல் மீது மோதி, கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரோடு வரலாறானான் மேஜர் காந்தரூபன்.
யாழ் நகரிலிருந்து 5 Km தொலைவில், மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அப்பால் இராசவீதியில் அறிவுச்சோலை அமையப்பெற்றது. தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், செம்பாட்டு நிலமும் ஒருங்கே அமையப்பெற்ற மாஞ்சோலையில் அறிவுச்சோலை அமைந்திருந்தது. முகப்பில் கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவாலயம் அமைந்திருந்தது. கூடவே பள்ளி, பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலுக்கு அமைந்திருந்தது. தொடக்கத்தில் 20 பிள்ளைகளுக்கு ஒரு இல்லமாகப் பிரிக்கப்பட்டு அறிவுச்சோலை இயங்கியது. ஒரு பாகத்திற்குப் பத்துப் பிள்ளைகள் வீதம், இருபாகங்களாக அறிவுசோலை அமைந்திருந்தது.
பத்துக் குடும்பங்களைக் கொண்டது ஒரு குடும்பம். குடும்பத்துக்கு ஒரு தாய், அன்னையாக அரவணைத்து அன்புடன் பராமரிப்பார். இவ்வாறு 14 குடும்பங்கள் அறிவுச்சோலையில் இருந்தனர். ஊட்ட உணவுடன், ஏழலில் (வாரத்தில்) இருமுறை மாணவர்கள் விரும்பும் உணவு வழங்கப்பட வேண்டுமென தலைவர் பணித்திருந்தார். 8 வயதுக்குக் கீழ்ப்பட்ட அனைவரும் காலை ஆறுமணிக்கு எழுந்து, இருபது நிமிடங்கள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடவேண்டும். தொடர்ந்து 20 நிமிடங்கள் உடற்பயிற்சி நிகழும். 7.00 மணிக்குக் குளித்துவிட்டு, 7.50 இற்கு உணவு அதன் பின், பாடசாலை செல்வர்.
பள்ளியால் வந்ததும் மாலை 3.00 மணிவரை ஓய்வு. பின்னர் நுண்கலைப் பயிற்சி வழங்கப்படும். வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோற்கருவி என இசைக்கருவிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப வழங்கப்படும். 6.30 மணிக்கு யோகாசனப் பயிற்சி நடைபெறும். பின்னர் தாமாகக் கற்கும் நிகழ்வு நடைபெற்று 9.30 மணிக்குப் படுக்கைக்குச் செல்வர். இவற்றினை விடவும்; வளர்ந்த சிறார்களுக்கு அறிவுசார் ஒளிப்பதிவுகள் காண்பிக்கப்படும். சிறுவர்களுக்கு கேலிச்சித்திர (cartoon) ஒளிப்பதிவுகள் காண்ப்பிக்கப்படும்.
50 மாணவர்களுடன் 01.11.1993 அன்று தொடங்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை , 128 பிள்ளைகள் வாழும் சோலையாக மாறியது. 16 ஆசிரியர்கள் கடமையாற்றினார்கள். சமூக மேம்பாட்டிற்கு அடிப்படையான பெண்கள் நாள், கரும்புலிகள் நாள், ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் நினைவு நாள் ஆகியவையும் அறிவுச்சோலையில் நடைபெறுவது வழமை. இவற்றிலும் பார்க்க; 11.08.1994 அன்று மாவீரர் குருபூசையை அறிவுச்சோலை நடாத்தியது.வீரருக்கு விழா எடுத்துப் பூசிப்பது பண்டைத் தமிழர் மரபாகும்.
தன்னைச் சாவு அரவணைக்கும்போதிலும், பிறர் வாழ வழிசெய்யும் தெய்வீகப்பிறவிகளே கரும்புலிகள் என்பதற்கு மேஜர் காந்தரூபன் ஒரு சான்றாகும்.


