கனடாவின் Brampton நகரில் தமிழீழத் தேசியக்கொடி

தமிழீழத் தேசியக் கொடிநாளான (21.11.2025) இன்று, கனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக்கொடிக்கு அங்கீகாரம் வழங்கிப் பிரகடனம் செய்தது. கடந்த 19.11.2025 அன்று Brampton நகர பிதா Patrick Brown தலைமையில் நடந்த விவாதத்தில் இம்முடிவு ஒருமித்து எடுக்கப்பட்டது.

தமிழீழத்தினதும் ஈழத்தமிழரினதும் முதன்மையான அடையாளமாகிய தமிழீழத் தேசியக்கொடியின் Brampton நகர முன்மொழிவிற்கான ஏற்பாடுகளை உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் கனடாவில் முன்னெடுத்தனர். இந்நிலையில் மாவீரர் வாரத்தில் மிகவும் பேரெழுச்சி மிக்கதாக இந்நிகழ்வினை நடாத்துவதற்கும், தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி அதனை முதன்மைப்படுத்தவும் நகரபிதா Patrick Brown அவர்கள் முன்வந்தார்.

காலம் காலமாக நடந்துவருகின்ற அந்நியப் படையெடுப்புகளாலும், அதன்பின்னதான பூகோள அரசியல் ஆதிக்கங்களாலும் எமது தாயக நிலமான தமிழீழம் 2009 ஆம் ஆண்டு முற்றுமுழுதாகச் சிதைக்கப்பட்டது. அதுவரையிலும் எமக்கான ஓர் மெய்நிகர் அரசு இயங்கிவந்தது. எமது தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, நிர்வாகங்கள் இயங்கின.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, நிகழ்வில் வரவேற்புரையை; உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பின் கனடாவிற்குரிய செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளருமான குமுதினி குணரட்ணம் அவர்கள் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை  சலங்கை நாட்டியாலயா கலைக்கூடத்தின் ஆசிரியர்  தயாளனி ஜீனராஜ்  இன் மாணவிகளான செல்விகள் சாதனா ஜீனராஜ், சஸ்மிகா சிவகுமார், டிலானி சந்திரசேகரம், டினோஜா சுஜீதன், அபிர்னா கணேசமூர்த்தி, அட்சயா சுபாஸ் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர்.

தமிழீழ அரசின் தேசியக்கொடியை உலகளாவி முதன்மைப்படுத்துவதன் மூலமாக ஈழத்தமிழர்கள் தமது வரலாறின் பக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் காண்பிக்கமுடியும். Brampton நகரில் இக் கொடியை ஏற்றுவதையிட்டுத் தாம் பெருமைப்படுவதாகவும், அதேவேளை ஈழத்தமிழருக்கு எவ்வேளையிலும் தாம் துணைநிற்பதாகவும் நகரபிதா Patrick Brown அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர்.   MPP Hon.Rob Cerjanec (Ajax), MPP Hon.Andra Hazell (Scarborough Guildwood), தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரான ஆரணி முருகானந்தன், Concervative கட்சியின் முன்னாள் வேட்பாளர் லயனல் லோகநாதன் ஆகியோரும் உரையாற்றினார்.

நிறைவாக; உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பின் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெயந்தன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். எமது தேசியக்கொடியை எங்கெங்கும் மகிழ்வோடும் உறுதியோடும் ஏந்துவது எமது மண்ணை மீட்கும் பணிக்கான முதற்படியாகும் என்பதாக அவரது உரை அமைந்திருந்தது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலோடு நிகழ்வு நிறைவெய்தியது.

 

 

தமிழீழம் என்பது தமிழர்களின் நீண்டகால வரலாறும், தொன்மையும் உள்ளடக்கிய தாயகப்பிரதேசமாகும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூறியதுபோல, தமிழகத்திற்கும் தாயகம் தமிழீழமாகும். இதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன.

இன்று உலகெங்கும் பேசப்படுகின்ற மொழிகளுள் தமிழ்மொழி மிகத்தொன்மையானதாகும். அவ்வாறான தமிழ்மொழியின் தொன்மையான பேச்சுவடிவம் இன்றுவரை தமிழீழத்தில் மட்டுமே உள்ளது, அது பேசப்பட்டும் வருகிறது. தொன்மை இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ள உரைநடைகளில் உள்ள பல சொற்கள் இன்றும் தமிழீழத் தமிழில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன.

இரண்டாவதாக; தமிழினத்தின் தொன்மையான வாழ்வியல் நடைமுறைகள் இன்றுவரை தமிழீழத்தில் நடைமுறையில் உள்ளன. நடுகல் வழிபாடு தொடங்கி, இயற்கையோடு ஒன்றிப்பிணைந்த உணவு, கலை மற்றும் பண்பாடு வரையிலான அனைத்தையும் உள்வாங்கிய நிலமாக தமிழீழம் அமைந்திருக்கிறது.

தரை, கடல் , வான்வெளிப் பலத்தோடு இயங்கிவந்த எமது மெய்நிகர் அரசை சிறிலங்கா அரசால் வெல்லமுடியாது என்ற காரணத்தாலும், தமிழீழம் அமையப்பெற்றால் பூகோள அமைவிட அடிப்படையில் ஆதிக்க அரசுகளுக்கு எதிராக இருக்கும் என்ற அடிப்படையை வைத்தும், எமது தமிழீழ அரசைப் பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் மேற்குலகம் அழுத்தித்தள்ளியது. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பொறிக்குள் எம்மைத் தள்ளிவிட்டு, சிறிலங்கா அரசிற்கு இராணுவப் பயிற்சிகளையும் இராணுவத் தளவாடங்களையும் மேற்குலக நாடுகள் அள்ளி வழங்கின. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே,

தமிழீழத்தின் வணிகக் கப்பல்கள் மேற்குலக மற்றும் இந்திய அரசுகளின் துணையோடு கடலில் அழிக்கப்பட்டன. அரசியற் பணிகளில் ஈடுபட்ட கருவியேந்தாத போராளிகள் சிறிலங்கா இராணுவத்தாலும், இராணுவ ஒட்டுக்குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்டனர். தமிழினத்தின் அறிவுசீவிகளான மாமனிதர் தராகி சிவராம், பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசேப் பரராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ், தமிழினப்படுகொலையை ஆவணப்படுத்திவந்த அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார், போன்ற பலர் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக; பேச்சுவார்த்தையைத் தலைமையேற்று நடத்திவந்த தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறிலங்கா இராணுவ விமானப்படையால் படுகொலைசெய்யப்பட்டார். அத்தோடு; எமது மக்களும், தமிழீழ விடுதலைக்காகப் போராடிய போராளிகளும் 2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில் வைத்து உலகநாடுகளால் படுகொலைசெய்யப்பட்டனர். தமிழினப்படுகொலை நடந்தேறியது. ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுவரை வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். 2009 வரை இயங்கிவந்த தமிழீழ அரசின் நிர்வாகங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. எமது தலைநகரான திருகோணமலை முற்றுமுழுதாக சிறிலங்கா, இந்திய, அமெரிக்க அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டன.

ஆனாலும் உலகமெல்லாம் பரந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாம் இன்றுவரை எமது மண்ணை மீட்கப் போராடிவருகிறோம். அதன் ஒரு பகுதியே இந்நிகழ்வாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

share this blog -

Facebook
Twitter / X
WhatsApp
LinkedIn

share this blog -

error: Content is protected !!
Scroll to Top