இன்று (27.04.2022) யேர்மனியின் உயர்நீதிமன்றில் நாதன் தம்பி வழங்கிய வாக்குமூலம் :
மண்ணுக்காக மடிந்த மாவீரர்களையும், இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி எனது உரையை ஆரம்பிக்கிறேன்.
எனது பெயர் நாதன். நான் தமிழீழத்தைச் சேர்ந்தவன். யேர்மனியின் வடமத்திய மாநிலத்தில் உள்ள …………… என்னும் இடத்திலேயே நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறேன். யேர்மனிக்கு நான் அகதித் தஞ்சம் கோரியே வந்தேன். 1994 ஆம் ஆண்டு தொடக்கம், இறைச்சித் தொழிற்சாலையிலும், உணவகங்களிலும் களஞ்சியமொன்றிலும் வேலை செய்து வருகிறேன். நானும் மனைவியும் மற்றும் 13 வயதுடைய மகனும், 18 மாதங்கள் வயதுடைய மகனுமான நால்வர் வாழ்ந்து வருகிறோம்.
நான் இங்கு வழங்கும் வாக்குமூலமானது , நான் தவிபு களுக்கு நிதி திரட்டியது குற்றம் என என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைகிறது.
கடந்த 2010 தொடக்கம் இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் பல விசாரணைகள் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பதின்மூன்று வருடங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 2017 ஆம் ஆண்டு எனது வீடு சோதனைக்குட்படுத்தப் பட்டது. அதற்கு ஆறு வருடங்களுக்குப் பிறகு நான் வழக்கை எதிர்கொள்கிறேன்.
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்கள் பலரது வீடுகளில் சோதனைகள் நடைபெற்றன . பலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். நான் எதிர்கொள்ளும் இதே குற்றச்சாட்டை, பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டு, தண்டப்பணம் செலுத்தினார்கள்.
இவர்களில் எவரும் குற்றச் செயல்களோடு தொடர்புபட்டிருப்பார்கள் என நான் நம்பவில்லை.
நான் இதைக் குற்றமாக ஏற்றுக்கொண்டு, தண்டப்பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. நான் நிதி திரட்டியமையை குற்றமாக ஏற்றுக்கொண்டு, தண்டப்பணம் செலுத்துமாறு பணிக்கப்பட்டேன். தண்டப்பணத்தைச் செலுத்துமாறு யேர்மனிய வழக்குரைஞர் ஒருவர் எனக்கு ஆலோசனை வழங்கினார். அந்த தண்டப்பணத்தொகையானது அதிகமானதாக இருக்கவில்லை என்பதுடன் அதைச் செலுத்தவும் என்னால் இயலும்.
நான் இந்தத் தண்டப்பணத்தைச் செலுத்தவில்லை என்றால், என்மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும், எனது வாழ்க்கை சிக்கலுடையதாக மாறும் எனவும், மேலதிக தண்டனைகள் கிடைக்க வாய்ப்பு உண்டென்றும் எனக்குச் சொல்லப்பட்டது. இந்தத் தண்டப்பணத்தைச் செலுத்துவதன் மூலம் அனைத்துமே சுமுகமாக முடியும் என்பதும், பொதுமக்களின் பார்வை என்மீது படாமல் எனது வாழவைத் தொடரவும் முடியும் என்பதையும் நான் அறிவேன்.
இந்த வழக்கை சாதாரண விடயமாக பார்க்க என்னால் இயலவில்லை என்பதாலேயே இதனை நான் இவ்வாறு செய்கிறேன்.
தவிபு களுக்காக நான் நிதி திரட்டினேன் என்பது உண்மையானதாகும். சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்திடமிருந்து எனது மக்களைப் பாதுகாக்கவும், தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென்றுமே நான் நிதி திரட்டினேன்.
என்னிடம் நன்கொடையளித்த அனைத்து யேர்மனிய வாழ் மக்களும் இதே காரணத்துக்காகவே நிதியை வழங்கினார்கள். இவ்வாறு நான் பெற்றுக்கொண்ட நிதியை ஒருபோதும் யேர்மனிய அரசிற்கெதிராகவோ அல்லது வேறு நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவோ பயன்படுத்தியதில்லை.
என்னை அகதியாக ஏற்றுக்கொண்டு, எனது உரிமைகளைப் பேணி, எனக்கு வாழ்வுதந்த யேர்மனிய நாட்டிற்கு நான் மிகவும் நன்றிக்கடப்பட்டிருக்கிறேன். என்னைத் தத்தெடுத்துக்கொண்ட இரண்டாவது தாய்நிலமாக இந்த நாட்டை நான் நேசிக்கிறேன். அதேவேளை ஒரு மகனாக எனது தாய்நாட்டில் வாழ முடியாமல் தவிக்கும் எனது மக்களுக்கு உதவிசெய்வதும் எனது கடமையென்றே எண்ணுகிறேன். அந்த எண்ணத்திலேயே நான் நிதி திரட்டினேன்.
தமிழீழ மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒரேயொரு அமைப்பாகவும், மக்கள் ஆதரவு பெற்ற அமைப்பாகவும் தவிபு இருந்ததனாலேயே நான் தவிபு களுக்கு ஆதரவாக இருந்தேன்.
நான் தவிபு களுக்கு நிதி திரட்டினேன் என ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இதை ஒரு குற்றமாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் செய்தது குற்றமென என்னால் ஏற்றுக்கொள்ளவியலாது என்பதில் நான் திடமாக உள்ளேன்.
ஏனென்றால் நான் எனது வாழ்க்கையின் இலட்சிய உழைப்பை மறுத்ததாக அது இருக்கும். இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடுவதே, எனது மக்களான ஈழத்தமிழரின் உரிமைகளுக்கும், கண்ணியத்திற்கும் முக்கியமானது என நான் நம்புகிறேன்.
சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்ட பின்னர், கடல் வான் தரை ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் தாக்கி, ஈழத்தமிழர் படுகொலை செய்யப்படுவதற்கு மௌனமாக அனுமதி வழங்கிய சர்வதேச சக்திகளுக்கும், என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த வழக்கிற்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது.
2006 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் தவிபு மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் , சமாதானத்தைச் சிதைத்து, ஈழத்தமிழருக்கெதிரான இனஅழிப்புப் போரை சிறிலங்கா ஆரம்பிப்பதற்கும் , தொடர்ச்சியாக படுகொலைகளை நடாத்துவதற்கும் ஏதுவான சாதகமான பச்சை விளக்கை ஒளிரச்செய்தன. தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட பாரிய போர்வன்முறைகளை சிறிலங்கா அரசு நியாயப்படுத்துவதற்கும் தவிபு மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உதவின.
இந்தக் குற்றம்சுமத்தல், சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஒரு தரப்பிற்கு எதிராக அமைந்ததானது, ஈழத்தமிழரின் அடிப்படை உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதனூடாக ஏற்பட்ட ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான மறுப்பையும் அதன் உரிமைகளையும் யேர்மனிய அரசானது பாதுகாத்திருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்.
இவ்வாறு குற்றம் சுமத்துதல் மீது கேள்வியெழுப்புதல் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரியதானதல்ல. ஒடுக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் இனத்துவேசம் கொண்டவர்களுக்கெதிராகப் போராடும் அனைவருக்குமான உரிமையாகும்.
யேர்மனிக்கும ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எமது சமாதானத்தை ஆதரிப்பதற்கான கடப்பாடுகள் உள்ளதா அல்லது, இந்தக் கொள்கைகள் பிற அதிகாரங்களுடனான அதன் உறவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமா ?
இவ்வாறான குற்றம் சுமத்துதல் மிகவும் ஆழமான தவறாகும் என்பதுடன், இதற்கெதிராக நான் எழவேண்டியது கட்டாயமாகிறது.
நான் தமிழீழ மண்ணில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். எனது சிறுவயது வாழ்வு எனது கிராமத்துடன் தொடர்புடைய உறவினரிடம் சென்றுவருவது, கோயிலுக்குச் செல்வது மற்றும் பாடசாலைக்குச் செல்வது மட்டுமேயாகும். எனது தந்தை ஓர் கட்டட ஒப்பந்தக்காரர் என்ற அடிப்படையில் எமது பொருளாதார நிலை இயல்பாக இருந்தது.
நான் ஏனைய சகோதரர்களுடன் வளர்ந்து வந்த பொழுதுகளில் , சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினபடுகொலைகள் பற்றி எனது அப்பா உரையாடுவார். 1921 ஆம் ஆண்டில் தமிழ் முஸ்லிம்கள் நடாத்திய பேரணி மீது சிங்கள வன்முறையாளர்கள் நடாத்திய தாக்குதல், 1956 ஆம் ஆண்டில் இங்கினியாகல என்னுமிடத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை, 1974 இல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டில் இடம்பெற்ற படுகொலை, ஆகியன பற்றி அவர் உரையாடியது எனக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அனைத்துமே சிறிலங்கா அரசின் அனுசரணையுடனேயே நடைபெற்றதுடன், இதை நடத்தியவர்களை இதுவரையில் சிறிலங்கா அரசு எவ்விதமான தண்டனைக்கும் உட்படுத்தவில்லை. பல்கலைக்கழகத்திற்கு தமிழ் மாணவர்களை நுழையாமல் தடுத்த வெட்டுப்புள்ளி முதற்கொண்டு, ஈழத் தமிழரை இலங்கையின் மக்களாக சிறிலங்கா அரசு நினைத்ததில்லை.
இவ்வாறான அடக்குமுறை அரசுக்கெதிராக, அமைதி வழியில் போராட்டங்களை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் தலைவர்கள் மீது, அடக்குமுறையையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் சிங்கள அரசு நடாத்த ஆரம்பித்த பிறகுதான், தமிழர்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தியாகவேண்டும் என்ற நிலைக்குள் தள்ளப்பட்டனர்.
எனக்கு 8 வயதாயிருக்கும்போது , சிங்களக் காடையர்கள் எமது மக்கள் மீது கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் நடாத்திய தாக்குதல்கள் மற்றும் சாகும்வரை மக்கள் எரிக்கப்ட்டதும் இன்றும் முதல் நினைவாக உள்ளது.
எனக்கு 10 வயதாக இருக்கும்போது, ……………….. என்ற இடத்திலிருந்த எனது பெரியப்பாவும், மைத்துனரும் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைக்கு அனுப்பப்பட்டமை நினைவிருக்கிறது.
அதுபோலவே இந்திய இராணுவத்தாலும் , துணை இராணுவக்குழுக்களாலும் நடாத்தப்ட்ட தாக்குதல்களிலிருந்து எமது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும் உண்டு.
இந்தியா ஆரம்பத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருந்தது. சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாத்து, போராளிகள் பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாட்டில் இடம் அமைத்துக்கொடுத்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி, இலங்கைக்குள் இந்திய இராணுவம் வந்தபொழுது, ஈழத்தமிழர்கள் அவர்களை சமாதானத் தூதுவர்களாக நினைத்து வரவேற்றார்கள். ஆனால், அதே இந்திய இராணுவம், தமது துணைக்குழுவான EPRLF மற்றும் ENDLF ஆகிய குழுக்களுக்கு ஆயுதங்களைக்கொடுத்து எமது மக்களுக்கெதிராகவே திரும்பிவிட்டது.
எனது பல உறவினர்களும், அப்பாவி பொதுமக்களும் தமது சொத்துக்களையும் உடமைகளையும் இந்திய இராணுவத் தாக்குதல்களால் இழந்தார்கள். இந்திய இராணுவமும் துணை இராணுவக்குழுக்களும் இணைந்து நடாத்திய பல தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர், பல இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டனர்.
இந்திய இராணுவ எறிகணைத் தாக்குதல்களால் காயமுற்ற எனக்குத் தெரிந்த நபர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, மருத்துவ மனை வாசலில் வைத்து இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணம் செய்த ஊர்தியும் எரியூட்டப்பட்டது.
இந்திய இராணுவ காலப்பகுதியில், பெண்கள் இரவில் தனியாக வீடுகளில் உறங்க முடிவதில்லை, மாலை 05 மணிக்குப் பிறகு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. வீடுகளுக்குள் புகுந்த இந்திய இராணுவம் பலரைக் கைது செய்து தமது முகாம்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டு பலர் வீடு திரும்பியதில்லை.
துணை இராணுவக்குழுக்கள் இலங்கை மற்றும் இந்திய இராணுவத் துணையுடன் இயங்கி, இளைஞர்களை வலுக்கட்டாயமாக தமது படையில் இணைத்தார்கள். நான் பல தடவை இவர்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறேன்.
இந்திய இராணுவமும் ENDLF துணை இராணுவக்குழுவும் பேருந்து ஒன்றில் சந்தைக்குள் வந்து எனது நண்பரொருவரின் மாமனாரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது. எனது நண்பர் இப்பொழுது யேர்மனியில் வாழ்கிறார். துணை இராணுவக்குழுக்கள் வீதியால் செல்பவர்களை சுட்டுகொலைசெய்யும். அவர்கள் சுடுவதை கண்டு சாட்சியாக இருந்தவர்களும் அவர்களால் கொல்லப்பட்டார்கள்.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இவ்வாறான கொடுமைகள் பாடசாலை செல்லும் வயதில் இருந்த எமக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின . இவர்களுக்கெதிராக ஆயுதம் ஏந்துவதே ஒரே வழி என்ற உணர்வு அப்போதே நமக்குள் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நேரங்களில் எமக்குப் பாதுகாப்பாக தவிபு இருந்தனர். அதனாலேயே எமது பாதுகாவலர்களாக நாம் தவிபு களை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டோம்.
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்களுக்கு வழங்க மறுத்த சேவைகளை, தவிபு கள் எண்பதுகளின் இறுதியில் செயற்படுத்த ஆரம்பித்தார்கள். மாலை நேர கல்வி நிலையங்கள், மருத்துவ சேவைகள், கிராமங்களில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்க்க நீதிமன்றுகளுக்கு ஒப்பான இணக்கசபை மன்றுகள் என்பனவற்றை தவிபு உருவாக்கி சேவை புரிந்தார்கள்.
1990 ஆம் ஆண்டளவில் இந்திய இராணுவம் திரும்பிச் சென்ற பின்னர், தமிழீழம் தவிபு கட்டுப்பாட்டுக்குள் திரும்பியது. இதற்குப் பதிலாக சிறிலங்கா அரசு தமிழர்களின் பகுதிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
அப்போது மின்சாரம் இல்லாவிட்டாலும், படுகொலைகளோ பாலியல் வல்லுறவுச் சம்பவங்களோ கொலைமிரட்டல்களோ இல்லாமல் மிகுந்த மகிழ்வுடன் வாழ்ந்தோம்.
மக்கள் ஒத்துழைப்புடன் விடுதலைப்போராட்டம் வளர்ச்சியடைந்தது. இவ்வேளையில் தமிழீழத்தில் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. புலிகள் தவறு செய்தால் கூட, அவர்கள் மீது வழக்கு தொடரக்கூடிய சுதந்திரம் அங்கு இருந்தது. அதுமட்டுமின்றி, சாதிய ஏற்றத்தாழ்வு போன்ற சமூக அடக்குமுறைகளை தவிபு அறவே இல்லாதொழித்தனர். ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதைவிடவும், ஆண்களும் பெண்களும் சமம் என்ற நிலையை தவிபு உருவாக்கினர்.
புலிகளின் நிர்வாகம் நடைபெற்ற பகுதிகளில் பொருளாதாரத் தடையுடன் கூடிய தாக்குதல்களையும் சிறிலங்கா அரசு ஆரம்பித்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு, சிறிலங்காவின் பேரினவாதம் தமிழர்கள் மீது படுகொலைகளை நடத்திவிட்டு, புலிகள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்ததாக உலகத்திற்குப் பிரச்சாரம் செய்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களே.
யாழ்ப்பாணம் தவிபு கட்டுப்பாட்டில் இருந்தபொழுது., பலாலி என்ற இடத்தில் சிறிலங்கா இராணுவம் முகாம் அமைத்திருந்தது. அவர்கள் அங்கிருந்து ஏவும் எறிகணைகளின் தாக்குதல் எல்லைக்குள் எனது வீடும் அமைந்திருந்தது. இதனாலேயே வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை நாம் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. ஒரே பாடசாலைக்குத் தொடர்ந்து செல்ல முடியாத நிலைக்கு நான் ஆளானேன்.
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் உறவுகளை இழந்தவர்கள் புலிகளோடு இணையைத் தொடங்கினார்கள். எனது நண்பர்கள் பலர் தாமாகவே முன்வந்து சிங்கள அரசுக்கெதிராக போராட இணைந்தார்கள். . சண்டை செய்வதா அல்லது வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதா என்பதே கேள்வியாக இருந்தது. எனது பெற்றோர் என்னை அங்கிருந்து அப்புறப்படுத்தத் தீர்மானித்தார்கள். உண்மையில் எனக்கு அது விருப்பமாக இல்லை. அது அவர்களது தெரிவாக இருந்தது.
அதன் விளைவாக 15 வயதிலேயே, 1990 ஆம் ஆண்டில் எனது குடும்பத்தை விட்டு நான் வாழவேண்டியிருந்தது. 18 வயதில் யேர்மனியை வந்தடைந்தேன். 1994 ஆம் ஆண்டில் அகதித் தஞ்சம் கோரினேன். தமிழ் பேசும் குடும்பங்களின் சூழலுக்குள் வாழ்ந்த நான், அதை விட்டு விலகி யேர்மனியில் வேறு மொழிக்குள் வாழ ஆரம்பத்தில் மிகுந்த சிரமாக இருந்தது.
நான் இங்கே வந்த பிறகு, இடைக்கிடையே எனது குடும்பத்துடன் தொடர்பை ஏற்படுத்தினேன்.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளின் மிக நெருக்கமான உதவிகளுடன் 1995 ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசு போரைத் தீவிரப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டளவில் அமெரிக்க அரசு புலிகளைத் தீவிரத்தை அமைப்பாக அடையாளப்படுத்தியதுடன், சிறிலங்காவின் படைகளுக்கான பயிற்சியையும் ஆரம்பித்தது.
1995 – 1996 காலப்பகுதியில் தவிபு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர், எமது குடும்பத்தினர் தென்மராட்சிவரை (கிளாலி) வந்து திரும்பிச் சென்றனர். சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டிற்குள்ள கொண்டுவந்த பின்னர், ஒட்டுக்குழுக்களும் இராணுவ துணைக்குழுக்களும் நகரத்தைத் தமது கைகளுக்குள் வைத்திருந்தனர். கதவைத் தட்டி பணம் கேட்பது, போதைப்பொருள் விற்பனை ஆகியவற்றை நடாத்தி சமூகத்தை சிதைக்க ஆரம்பித்தார்கள். இந்தக்காலப்பகுதியில் தான் ஏராளமான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள்
சிறிலங்காவின் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க , சமாதானத்திற்கான போர் என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தாலும் புலிகளை வெற்றிகொள்ள சிறிலங்கா அரசால் முடியவில்லை. ஆனால் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் தூண்டப்பட்ட வண்ணமே இருந்தன.
இந்தநிலையில், சிறிலங்கா அரசும் தவிபு களும் இராணுவச் சமநிலையில் சமமாக இருந்த காலமான 2000 ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியமானது சமாதான முன்னெடுப்புகளுக்கான உறுதியான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியது.
ஐரோப்பிய ஒன்றியம் முன்னெப்போதுமில்லாதவாறு வித்தியாசமான வழியில், பிரித்தானிய அமெரிக்க அரசுகள் செய்வதை போல அல்லாமல் செயற்பட்டது குறிப்பிடத்தக்கதாக எமக்கு இருந்தது. இராணுவ முறையில் தீர்வு காணும் அமெரிக்க முறைக்கு எதிராக, அமைதியை நிலைநாட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கியது.
நிரந்தரமான சமாதானம் வந்துவிடுமென்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்கள் இருந்தனர். சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்த பின்னர், எமது மண்ணில் நிறைந்த அமைதி நிலவப்போகிறது என நான் முழுமையாக நம்பினேன். ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவே இதற்கு காரணமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி கிளிநொச்சி சென்று எமது தேசியத்தலைவரைச் சந்தித்தது மட்டுமின்றி, புலிகளின் தளபதிகளும் ஐரோப்பாவிற்கு வந்தனர்.
சமாதான முன்னெடுப்புகள் பல சாத்தியமான விளைவுகளை தந்தன. புலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்களிலிருந்த தடைகள் நீக்கப்பட்டன. புலிகளின் அரசியற் துறையினர் யாழ்ப்பாணத்தில் பிரவேசித்தனர். ஒட்டுக்குழுக்களாலும் , போதைப்பொருள் கும்பலாலும் ஏற்பட்ட பிரச்சனைகளை 2002 முதல் விடுதலைப்புலிகள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அமைதியை நிலைநாட்டுவதில் யேர்மனி ஒரு பிரதான பங்கை வகித்தது. யேர்மனியின் அமைச்சர்களும், அரசியற் கட்சிகளும் விடுதலைப்புலிகளை அவர்களது அமைப்புகளையும் சந்தித்து உரையாடினார். பலதடவைகள் புலிகள் யேர்மனிக்கு வருகை தந்ததுடன், சிறிலங்கா அரசுடன் கலந்தாலோசிப்பதற்காக பெர்லினுக்கும் வந்திருந்தனர். இதற்கு யேர்மனிய அரசு ஆதரவு தந்தது. யேர்மனியத் தமிழர்களும் புலிகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை யேர்மனி ஏற்படுத்தி தந்தது.
யேர்மனியின் செயற்பாடுகள் தீவிற்குள் ஓர் நிழல் அரசை இயல்பாக உருவாக்க உதவியதுடன், எமக்கு அமைதி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உருவானது.
இக்காலப்பகுதியிலேயே நான் தவிபு விற்காக ஏராளமான நிதியைத் திரட்டினோம். யேர்மனிய அரசும் புலிகளுக்கும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புகளுக்கும் ஆதரவு வழங்க உதவியது. ,
ஆசியாவில் பேரழிவை உண்டாக்கிய சுனாமி மீள்கட்டமைப்பு நிதியை சிறிலங்கா மற்றும் தவிபு களிடம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்தது.
ஆனால் இதுவெல்லாம் மிகவும் அதிர்ச்சியான முடிவை எட்டியது. ஐரோப்பிய ஒன்றியமானது தவிபு களை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்தது எமக்குப் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவல்ல என்பதையும், பிரித்தானிய அமரிக்க அழுத்தங்களின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு என்பதையும், இது அமெரிக்காவின் அரசியல் நன்மைகளுக்காக முன்னெடுக்கப்பட்டது என்பதையும் நாம் அறிந்துகொண்டோம்.
2005 ஆம் ஆண்டளவில் தவிபு கள் மீது பிரயாணத் தடையை பிரித்தானிய அரசு விதித்தபோது புரூசெல்ஸ் நகரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். பல்லாயிரம் தமிழர்கள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் தவிபு மீது தடை விதிப்பதை தவிர்க்குமாறு வேண்டினர். தடை விதிக்கப்படும் பட்சத்தில், துவேசம் கொண்ட சிறிலங்கா படைகளுக்கு போரை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை அது வழங்கும் எனக்கூறினோம்.
ஆனாலும் 2006 ஆம் ஆண்டின் MAY மாதப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தவிபு மீது தடைவிதித்தது. இது எமது நம்பிக்கைகளை எல்லாம் சிதறடித்தது. தடையின் பின்னதாக உடனேயே போர் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு 2009 இல் ஈழத்தமிழர் படுகொலைகளை சிறிலங்கா இராணுவம் வன்னிப்பகுதியில் நடத்தியது.
ஒவ்வொருநாளும் வன்னிப்பகுதியில் இருந்து அனுப்பிவைக்கப்ட்ட ஒளிப்பதிவுகள் எங்களால் மட்டுமே பார்க்கப்பட்டது. ஏனையவர்கள் அதை பார்ப்பதற்கு ஆர்வம் கொள்ளவில்லை. உலகெங்கும் கவனயீர்ப்புப் பேரணிகள் நடைபெற்றன.
பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் மீது சிறிலங்கா இராணுவம் குண்டுவீச்சை நடத்தியது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள், தவிபு கள் தீவிரவாதிகள் என்றும் சிறிலங்கா அரசு அவர்கள் மீது முறையான போரை நடாத்திவருவதாகவும் அறிக்கை வெளியிட்டன.
இன்று தவிபு களும் தமிழ் மக்களுடைய பலமும் நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. எஞ்சியிருக்கும் தமிழர்கள் அடிமைகள் போலவே சிங்கள இனப்படுகொலை அரசால் நடத்தப்படுகிறார்கள். சிறிலங்கா அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்ட இளைஞர்களது பெற்றோர்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள் .
நான் தொடர்ந்தும் ஈழத்து தமிழருக்கான வாழ்வாதார உதவிகளை செய்துகொண்டிருக்கிறேன். யேர்மனி போன்ற நாடுகள் தமது கொள்கைகளை மாற்றவில்லை என்றால், ஈழத்தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து மறைந்துபோய்விடுவார்கள்.
தவிபு கள் மீது சுமத்தப்பட்ட குற்றமானது எவ்வளவு கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த நீதிமன்றில் நான் இப்போது உணர்கிறேன். இதனாலேயே நான் குற்றம் செய்தவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக உள்ளேன். இதை ஏற்றுக்கொண்டால், தமிழர்கள் உரிமையற்றவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள நேரிடும். குற்றமயமாக்கலின் இந்த தலையீடு போரைத் தொடங்குவது நியாயமானது என்றும் அழித்தொழிப்பு மற்றும் செயல்முறை தொடர அனுமதித்தது.
தவிபு மீதான தடை ஐரோப்பிய ஒன்றியத்தால் கொண்டுவரப்படவில்லை என்பதை நாம் அறிவோம். அதனாலேயே யேர்மனிய நாடு தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம், இனவெறிக்கு எதிரானதும் அடக்குமுறைக்கு எதிரானதும், வன்முறையான போருக்கு எதிரானதுமான வித்தியாசமான நிலைப்பாட்டை எடுக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறான குற்றம் சுமத்துதலை ஐரோப்பிய ஒன்றியம் நிகழ்த்தவில்லையென்றால், முள்ளிவாய்க்காலில் 2009 ஆண்டு உயிரிழந்த அத்தனை மக்களும் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அமைதியும் சமாதானம் தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறிலங்காவிற்குமே கிடைத்திருக்கும். இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு சிறிலங்காவை இட்டுச்சென்றதும் சமாதானத்தை விட்டு விலகிய ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடேயாகும்.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு சரியானதைச் செய்ய வாய்ப்பு உள்ளது, மேலும் ஐரோப்பிய ஒன்றியத் தடை பற்றிய ஆதாரங்கள் இந்த நீதிமன்றிடம் இருக்கும் என்று நான் நம்புகிறேன்
எனது வேண்டுகோளானது ஈழத்தமிழருக்கு ஓர் நீதியைப் பெற்றுத்தரக்கூடிய அடித்தளத்தை இட்டுத்தரும் என்றும், தமது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என நம்புகிறேன்.
இந்த வழக்குக்கு முக்கியமானவை என நான் கருதிய அனைத்தையும் இத்தருணத்தில் கூறிவிட்டேன் என்பதுடன், நீதீமன்றத்தில் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்பதையும் அறியத்தருகிறேன்.