அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் தவிபுமீது விதிக்கப்பட்ட தடையே தமிழினப்படுகொலைக்குக் காரணமாக அமைந்தது என்பதை நிறுவுவதற்கான தீர்ப்பாய அமர்வு – 3 நேற்றுடன் நிறைவெய்தியது.
33 சாட்சியங்கள் தமிழீழ அரசின் 2009 இற்கு முற்பட்ட இயங்குநிலையை இரகசிய வாக்குமூலங்கள் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
ஊடக நிறுவகங்கள் சார்பில், காத்திரமான வாக்குமூலங்களைப் பதிவுசெய்த JDS ஊடக இயக்குநர் பாஷண அபேயவர்த்தன, தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயச்சந்திரன், தமிழீழ / சிறிலங்கா ஊடகங்களின் பிரதிநிதிகள், தமது பணியைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தமிழீழத்தின் கிறித்தவ மதகுரு மற்றும் மக்கள், தலைமைத்துவத்தை இழந்த பெண்களின் சார்பில் திருமதி ஆனந்தி சசிதரன், தென்தமிழீழத்தைச் சேர்ந்த இசுலாமியத் தரப்பு மாணவர்கள், 2009 இல் தமிழினப்படுகொலை நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து தப்பிவந்த பொதுமக்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், சிறிலங்கா இராணுவத்தால் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள், முள்ளிவாய்க்காலில் இறுதிவரை செயற்பட்ட மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் என 25 இற்கும் மேற்பட்ட சாட்சியங்கள் தமது வாக்குமூலங்களை நீதியாளர்கள்முன் பதிவுசெய்திருந்தனர்.
புலம்பெயர் மாணவர்கள் சார்பில் ஆதித்தன் ஜெயபாலன்(Ph.d) தனது வாக்குமூலத்தையும் ஆய்வையும் சிறப்பாகச் செய்திருந்தார்.
தமிழினப்படுகொலை ஆவணத்தளம் சார்பில், தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டினை உருவாக்கிய தட்சா தனது அறிக்கையைச் சிறப்பாகச் சமர்ப்பித்தார். அவரது உரையின்போது தலைமை நீதிபதியிடம் தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு கையளிக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழராக தவிபுவிற்கு நிதி திரட்டி, வழக்கை எதிர்கொண்டு நிற்பவர்கள் சார்பாக திரு.நாதன்தம்பி தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்தார். தமிழினப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நாம் நிதிதிரட்டினோம் என்றும், இதற்காக ஈழத்தமிழர்கள் யேர்மனிய அரசால் தண்டிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற வகையிலும் அவரது வாக்குமூலம் சிறப்பாக அமைந்திருந்தது.
இசுப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் நால்வரும் தமது பணியினை ஓய்வின்றிச் செய்திருந்தனர்.
யேர்மனிய பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட, யேர்மனியத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், அயர்லாந்து மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து வருகைதந்த மாணவர்கள், நிகழ்வின் ஒழுங்கையும் தொழில்நுட்பப் பணிகளையும், படப்பிடிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பையும் சிறப்பாக நிகழ்த்தினர்.
Public procecutorகளாக பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றின் பேராசிரியர் ஒருவரும், கனடாவிலிருந்து வருகைதந்த சட்டத்துறை வல்லுநர் ஒருவரும் செயற்பட்டனர்.
(நேற்று 12 – 1 மணிவரை தீர்ப்பாய ஒளிபரப்பின் Zoom அலைவரிசை மற்றும் இணையத்தளம் ஆகியன விசமிகளால் சீர்குலைக்கப் பட்டிருந்தன)
வழங்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் நாம் நேர்த்தியான முடிவை எட்ட வாய்ப்பிருக்கிறது என அமர்வின் இறுதியில் உரைநிகழ்த்திய தலைமைநீதிபதி, தமிழினத்தின் அவலங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட தமிழர்கள் கடுமையாக உழைக்கவேண்டுமெனப் பதிவுசெய்தார்.
நிகழ்வை நிறைவுசெய்யும் வகையில் ததேமமு யின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் உரைநிகழ்த்தினார். (அவர் தென்தமிழீழப் பகுதியிலிருந்து உரை நிகழ்த்தியதால் இணையவசதிக் குறைபாடுகாரமாக அவரது உரை முழுமையடையவில்லை)
நிகழ்வை தமிழில் அறிக்கையாகவும், நிகழ்வுக்குரிய வரவு செலவு விபரங்களையும் திரு.வலன்ரைன் அவர்கள் தொடர்ச்சியாகப் பதிவுசெய்தார்.
நிகழ்விற்குரிய உபசரிப்பு உட்பட்ட பல தேவைகளை உடனுக்குடன் அவ்விடத்திலிருந்து கவனித்த பேர்லினைச் சேர்ந்த பாஸ்கரன் அண்ணா, மற்றும் திரு.பரஞ்சோதி மற்றும் ஆதவன் ஆகியோர் என்றென்றும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றும் நாளையும் நீதிபதிகளின் தனித்த அறிக்கைகள் தொகுக்கப்பட்டு அதன்பின்னர் தீர்ப்பு வெளியிடப்படவுள்ளது.
ஏறக்குறைய 45,000 யூரோ செலவாகும் எனத்திட்டமிடப்பட்ட இந்நிகழ்விற்கு, இப்பொழுது 52,000 யூரோ செலவாகியிருக்கிறது. (இதுவரை 14,000 யூரோ வரையே நன்கொடை கிடைத்திருக்கிறது) மிகுந்த நிதிச்சுமையால் அழுத்தப்படுகிறோம். எமது அடுத்தகட்ட நகர்வுகளை இந்நிதிச்சுமை கடுமையாகப் பாதிக்கும் என்ற கவலையே இப்பொழுது மிகுந்திருக்கிறது. உறவுகள் முடிந்தளவு உதவிக்கரம் நீட்டுக.
இணையவழி செலுத்த : இங்கே அழுத்தவும்