ஒரு சமூகத்தில் புனிதத்தின் வேலை என்ன என்பதை மேற்கூறிய கருத்துக்களின் ( பார்க்க புனிதம் -1) அடிப்படையில் பின்வருமாறு தொகுக்கலாம்:
1. சமூக தோற்றத்தின் ஆரம்ப நிலை
2. சமூக உலகைப் படைக்கிறது.
3. ஒரு முன்மாதிரி ; மக்கள் முன்மாதிரியை நகலெடுத்தல்
4. மாறாதது
5. குறிக்கோள்கள்
6. சமூகத்தை ஒழுங்குபடுத்தி புதுமைப் படுத்தல்
இப்பொழுது ஒரு முக்கியமான கேள்விக்கு வருவோம். புனிதம் என்பது மனித சமூகங்களுக்கு மட்டும்தானா, இல்லை அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதா? இதற்கான விடை “பொதுவானது” எனபதே ! ஒரு உயிரின் புனிதம் எது என்று காணவேண்டும் என்றால், மேற்கூறிய புனிதத்தின் வேலைகளை எது செய்கிறது எனப்பார்க்க வேண்டும். உயிரியல் படித்தவர்கள் ஒரு நிமிடம் யோசியுங்கள். விடை கீழே.
இதற்கான விடை என்பது ஒரு உயிரின் மரபணுக்களே(DNA). மரபணுக்களின் வேலை என்பது:
1. ஒரு கருமுட்டையாக ஒரு செல் உயிராக ஆரம்பிக்கிறது (ஆரம்ப நிலை )
2. அது குட்டிபோட்டு பிரிந்து முழு உயிருடலை உருவாக்குகிறது. அது எந்த விலங்காகவோ அல்லது தாவரமாகவோ இருக்கலாம். அது உருவாக்கும் உயிர் மரபணுவைப் பொறுத்தது.
3 மரபணு என்பது நகலெடுப்பதற்கான முன்மாதிரியாக உள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் மூல மரபணுவை நகலெடுத்து உருவானவை.
4. ஒவ்வொரு செல்லிலும் அதே மரபணுதான் உள்ளது. மரபணு அவ்வுயரின் இறுதிவரை மாறாதது.
5. அவ்வுயிரின் குறிக்கோள்களை / செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.
6. ஒரு செல்லில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உடலிற்கு தீங்கு ஏற்பட்டாலோ, மரபணுக்கள் தீங்கை அகற்றி புதுமைப் படுத்துகிறது.
இந்த ஒப்புமையில் இருந்து ஒன்றை உணரலாம். மரபணுக்கள் இல்லாமல் உயிர் இல்லை, அதுபோல புனிதம் என்று ஒன்றில்லாமல் சமூகம் என்பது இல்லை.
மேலும் ஒரு விசித்திரமான தன்மையைக் காணலாம். ஒரு உயிரின் மரபணு என்பது முக்கியமானது, சேதமாகிவிடக் கூடாது என்பதற்காக, அதற்கென்று தனி அறை ( nucleaus) ஒதுக்கப்பட்டு காக்கப்படுகிறது. அதுபோல மனிதனும் புனிதத்தை ஒரு கோவிலுக்குள் பூட்டி மாற்றாமல் காக்கிறான். ஒவ்வொரு செல்லின் மத்தியிலும் ஒரு மரபணு நகல் இருப்பது போல, ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரின் மத்தியிலும் கோவில் கட்டுகிறான். இது அனைத்து பண்டைய சமூகங்களிலும் காணலாம். இது ஏனென்னறால் ஒரு சமூகம் இணைந்து செயல்பட வேண்டும் என்றால் ஒரு பொதுவான புனிதம் தேவையானது. இது நவீன சமூகங்களுக்குப் பொருந்துமா எனக் கேள்வி எழுகிறது. ஒரு நவீன சமூகத்திற்கும் புனிதம் தேவைப்படுகிறது, ஆனால் அது வேறு வடிவம் எடுக்கிறது. அந்தப் புனிதம் என்பது நாட்டின் தியாகியாக இருக்கலாம், அல்லது மார்க்சு, பெரியார், காந்தி, அம்பேத்கர் என்று புனிதராக இருக்கலாம். கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்லிவிட்டால், புனிதம் இல்லை என்று ஆகிவிடாது. இன்று பெரியாரிய பக்தர்கள் பெரியாரைப் புனிதாராகப் பார்ப்பதை நாம் காண்கிறோம். ஏனென்றால் புனிதம் இல்லாமல் ஒரு சமூகத்தைப் படைக்கவே முடியாது. அவர்கள் புனிதத்தைப் பள்ளிகளில் வைத்துக் கற்பிக்கிறார்கள். பள்ளிகள் இன்றைய நவீன புனிதத்தைக் காத்து பரப்பும் கோவில்கள்.
புனிதம் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும், மரபணுக்கள் ஒரு உயிரில் ஏற்படுத்தும் விளைவுகளும் கிட்டத்தட்ட ஒரே தன்மையை கொண்டிருக்கின்றன [ 1,2 ]. இது ஏன்? அடிப்படையில் உயிர்களில் ஏற்படும் மாற்றங்களை உயிரியல் பரிணாமம் ( Biological evolution) என்கிறோம். சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை பண்பாட்டு பரிணாமம் ( Cultural Evolution ) என்கிறோம். உலகில் அனைத்து மக்களுக்கும் ஒரே உளவியல்தான். உடலளவில் நிறங்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரும் ஒரே மனிதப் பண்புகளை உடையவர்களே. ஒரு சமூகத்திற்கும் இன்னொரு சமூகத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்பது பண்பாடே. மனித சமூகங்களுக்கு இடையே ஏற்படுவது பண்பாட்டு பரிணாமம், உயிரியல் பரிணாமம் அல்ல. ஒரு சமூகம் உயர்கிறதா அல்லது அழிகிறதா என்பதைத் தீர்மானிப்பது பண்பாடே. ஒரு உயிரை எவ்வாறு மரபணுக்கள் உருவாக்குகிறது,அதுபோல ஒரு சமூக பண்பாட்டை உருவாக்குவது அச்சமூகத்தின் புனிதமே. இதை உலக வரலாற்றைப் பார்த்தாலே விளங்கும்.
புனிதம் என்றால் கடவுள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. மேலுள்ள செயல்பாடுகளைக் கொண்ட எதுவேண்டுமானாலும் புனிதமாக இருக்கலாம். மனித சமூக பரிணாமத்தில் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை இறை சார்ந்த புனிதம் வரலாற்றில் சமூகப் பரிணாம மாற்றத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறது, இன்றும் அது தொடர்கிறது. உலகில் பல நாடுகள் மதசார்புள்ள நாடுகளாக உள்ளன. மத சார்பற்ற நாடுகளிலும் மதம் பெரும்பங்கு வகிக்கிறது. புனித வேறுபாடுதான் இந்தியா பாக்கிசுத்தான் என இருநாடுகளை உருவாக்கியது. தமிழர்கள் வாழும் இந்தியாவிலும் இலங்கையிலும் மத அரசியல்தான் ஓடுகிறது. இறைநம்பிக்கை குறைவான மேற்குலக நாடுகளில், சித்தாந்தம் சார்ந்த புனிதம் ஆள்கிறது. அடிப்படையில் ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் எனில் நாம் அவர்களின் புனிதத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கே ஒரு முக்கியமான கேள்விக்கு விடை அளிக்கவேண்டும்: புனிதமே இல்லமால் பகுத்தறிவின் அடிப்படையில் அனைவரின் பொது நன்மைக்காக ஒரு சமூகத்தை உருவாக்க முடியாதா? இது முடியாது என்பதுதான் சமூக அறிவியலாளர்களின் பார்வை. இடர்க்கையிம் அவர்கள் இதை இவ்வாறு விளக்குகிறார் [3]:
அனைவரும் உட்கார்ந்து பேசி பொது நன்மைக்கா எவ்வாரு ஒரு அரசை உருவாக்குவது என ஒப்பந்தம் ஏற்படுத்தலாம். இதில் சிக்கலே இல்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால் இந்த ஒப்பந்தத்தை யாரும் மீறாமல் ஏமாற்றாமல் பின்பற்றுவார்கள் என்பதற்கு எது உத்திரவாதம் அளிக்கும். ஒப்பந்தத்தைத் மீறினால் தனக்கு இலாபம் என்றால், ஏமாற்றுதல் அதிகரிக்கும், பின்பு சமூகம் செயலிழக்கும். இதை சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்:
உலகில் அமைதியை உருவாக்க உலக நாடுகள் எல்லாம் உட்கார்ந்து பேசிய ஒப்பந்தம்தான் ஐக்கிய நாடுகள் அவை. அங்கெ என்ன நடக்கிறது? ஒவ்வொரு நாடும் தனக்கு ஆதாயம் இருந்தால், ஒப்பந்தத்தை மீறி தனது விருப்பப்படி நடக்கும். ஐ.நாவால் ஒன்றுமே செய்யமுடியாது. குட்டி இலங்கையில் கூட நீதியை வழங்க முடியவில்லை.
இலங்கை சுதந்திரம் அடையும் பொழுது, தமிழர் தலைவர்கள் தமிழர்களின் உரிமைகள் காக்கப்படும் என நம்பினார்கள். என்ன நடந்தது? சிங்களவர்கள் தங்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன் அனைத்து ஒப்பந்தங்களையும் கிழித்தெறிந்து விட்டார்கள். அதேபோல் இந்தியாவிலும் பல்வேறு மக்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர்.
அடிப்படையில் இடர்க்கையிம் கூறுவது என்னவென்றால் பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. சமூகத்தின் அடித்தளம் என்பது பகுத்தறிவற்ற புனிதத்திலும் சடங்குகளிலும் இருக்கிறது என்கிறார்.
Certain ideas of Durkheim remain absolutely central for sociological theory. These are his proof that society, and rationality itself, rest upon non-rational foundation, and his theory of rituals as the mechanism by which group solidarity is created. [3]
இதை சமூகத்திற்கு உள்ளும் பார்க்கலாம். முன்பு திருமணம் என்பது புனிதமாகப் பார்த்தார்கள், அதனால் அவை நீடித்து நிலைத்தது. இன்று திருமணம் என்பது இலாப நோக்கம் கொண்ட ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கிறார்கள். எப்பொழுது தனக்கு இலாபம் இல்லை என்று நினைக்கிறார்களோ, அப்பொழுது முறித்துக் கொள்கிறார்கள். புனிதம் இல்லாத சமூகம் இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து அழியும்.
புனிதம் என்று ஒன்று இல்லாத சமூகத்தில் ஒருவரை ஒருவர் சுய இலாபத்திற்கு ஏமாற்றுவது அதிகரிக்கும். அன்றைய காமராசர் போன்ற தலைவர்கள் தூய்மையானவர்களாக இருந்ததற்கு ஒரு காரணம் அவர்களுக்கு புனிதம் என்று இருந்தது. அதன் பின்வந்த பகுத்தறிவுப் பகலவன்கள் ஆட்சியில் இலஞ்சம் ஊழல் பெருத்தமைக்கு புனிதத்தின் இழப்பு ஒரு காரணமாக இருக்கலாம். அது நண்டுப் பண்பாடாக வெளிப்பட்டு நம்மை அழிவை நோக்கி நகர்த்துகிறது.
சந்தைப் பொருளாதாரம் என்பது பகுத்தறிவினால் நடப்பது என்று எடுத்துக் கொண்டாலும் அதன் அடிப்படை பகுத்தறிவற்ற நம்பிக்கையிலேயே இருக்கிறது என்கிறார் நவீன பொருளாதாரத்தின் தந்தையான ஆடம் சுமித்து. நம்பிக்கையில்லாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றினால் தொழில் கூட வீழ்ச்சியடையும். உலகில் பல்வேறு சிறிய சாதி இனக்குழுக்கள் (யூதர்கள் ) பல்வேறு தொழில்கள் தொடங்கி செல்வந்தர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களின் பகுத்தறிவும் மட்டும் அல்ல, மாறாக அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கையால் ஒருவருக்கொருவர் ஏமாற்றாமல் உதவி செய்வதுதான். அந்த நம்பிக்கை என்பது அவர்களின் பொதுவான புனிதத்தின் மூலம் வருகிறது [4]. நம்மூரில் பல கடைக்காரர்கள் நெத்தியில் பெரிய பட்டையுடன் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களின் பக்தியின் அடையாளம் போல தோன்றினாலும் , உண்மையான நோக்கம் என்பது “தான் நம்பத் தகுந்தவன்” என அடையாளப் படுத்துவதற்குத்தான். நம்பிக்கைதான் பொருளாதாரத்திற்கும் அடிப்படை.
இன்று தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்றால் அதற்கான அடிப்படைக் காரணம் என்பது நமக்கான பொதுவான புனிதம் இல்லை என்பதுதான். புலிகள் இதை உணர்ந்துதான் மாவீரர்கள் என்ற, அனைத்துத் தமிழரையும் இணைக்கும் ஒரு புனிதத்தை உருவாக்கினார். அந்தப் புனிதம் இல்லாமல் அதி ஒற்றுமை நம்பிக்கை கொண்ட படைகளை அவர்களால் உருவாக்கி இருக்க முடியாது. அவரே இன்று அதன் அங்கமாகி தமிழரின் மாபெரும் புனிதமாக மாறி நிற்கிறார். என்று அனைத்துத் தமிழரும் அவரைப் புனிதமாக ஏற்றுக் கொள்கிறார்களோ , அன்று நமது எதிர்காலம் பிரகாசமாகும். அது தமிழர் பண்பாட்டின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக புலிப்பண்பாட்டை உருவாக்கும். மீளவும் நாம் எல்லையில்லா சாதனைகள் படைக்கும் சமூகமாக மாறுவோம்.
நூல்கள் :
Fromm, Jochen. Hidden Genes. epubli, 2020.
Wilson, David. Darwin’s cathedral: Evolution, religion, and the nature of society. University of Chicago press, 2019.
Collins, Randall. “Sociological insight: An introduction to non-obvious sociology.” (No Title) (1992).
Burt, Ronald S. Brokerage and closure: An introduction to social capital. Oxford University Press, USA, 2005.
– கலாநிதி சேது இராமலிங்கம்