மாவீரர் நாள்

மாவீரர் நாள்

புனிதம் என்பது மனிதன் உள்ளுக்குள் உணர்வது, அது முற்றிலும் உளவியல் சம்பந்தப்பட்டது. ஈழத்திலே நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரு இறை வழிபாட்டுத் தளத்தில் இருக்கும் அதே புனிதத்துடன் கடைபிடிக்கப் பிடிக்கப் படுகிறது. மக்களும் அதே புனித உணர்வுகளுடன் பின்பற்றுகிறார்கள். மாவீரர் நாள் எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டுமோ, அப்படியே அச்சுப் பிசகாமல் ஈழத்தில் நடக்கிறது.

தமிழினத்தை மீட்டெடுத்து, மீண்டும் ஈழத்தை உருவாக்கி, தமிழினத்தை பல தலைமுறைகள் தாண்டி அழியாமல் காக்கும் தன்மை மாவீரர் நிகழ்வுக்கு உண்டு. இது ஏனென்றால் அதற்கு ஒரு தலைமுறையின் உணர்வுகளை அப்படியே அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வலிமை உண்டு. நாம் நமது வரலாறை அடுத்த தலைமுறைக்குக் கற்பித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நமது உணர்வுகளையும் கற்பிக்க வேண்டும். உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல, உணர்வில்லாத வரலாறு கற்பித்தல் என்பது அவர்களிடம் நிலைத்து நிற்காது. உணர்வுகளைப் புனிதத்தின் மூலமே ஒரு மனிதனிடம் உருவாக்க முடியும். இறை நம்பிக்கை பலதலைமுறைகள் தாண்டி இன்னும் நிற்கிறதென்றால், மதங்கள் உணர்வுகளை சரியாக புனிதங்கள், சடங்குகள் மூலம் கடத்துவதினால் ஏற்படுகிறது.

நாம் அடுத்த தலைமுறைக்கு உணர்வுகளைக் கடத்த வேண்டுமானால், மாவீரர் நாளின் புனிதத்தை சரியாகப் பின்பற்றுவதின் மூலமே நடக்கும். அதனால் ஈழத்தில் எவ்வாறு இன்று மாவீரர் நாள் புனிதத்துடன் கடைபிடிக்கப்படுகிறதோ, அதே புனிதத்துடன் அப்படியே மாறாமல் கடைப்பிடிக்கவேண்டும். இதற்குச் சில வழிமுறைகள்:

1. எக்காலமும் கொஞ்சம்கூட நிகழ்வில், நேரத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. பத்தாயிரம் வருடங்கள் ஆனாலும், அப்படியே நடக்கவேண்டும்.

2. புனித இடம் என்பது மனிதன் உருவாக்குவதல்ல, இறைவன் அல்லது புனிதம் உருவாக்குவது. மாவீரர் நாள் வேறு நாட்டில் அல்லது இடத்தில் நடத்தப் படுகிறதென்றால், அவ்விடம் புனிதப் படுத்தவேண்டும். உதாரணமாக ஈழத்தில் இருந்து சில கல்லறைச் சிதறல்களைக் கொண்டுவரலாம். இதை மேற்குலகில் பலர் தாமாகவே உள்ளுக்குள் உணர்ந்து இதைச் செய்கின்றனர்.

3. நிகழ்வுகள் சரியான காலத்தில் நொடி வித்தியாசம் இன்றி கடைப்பிடிக்கவேண்டும். உறுதிமொழி, கொடியேற்றம் முதற்கொண்டு அனைத்து சடங்குகளும் அச்சுப்பிசாகாமல் நடக்கவேண்டும்.

4. புனித இடம் என்பது சாதாரண இடம் இல்லை. அது ஒரு வேற்றுலக இடம். மக்கள் தங்கள் இறைவன் அல்லது புனிதத்தைக் கண்டு உரையாடும் இடும். சாதாரண இடங்களில் இருக்கும் எதுவும் அங்கு இருக்கக்கூடாது. ஒரு இறைவழிபாட்டுத்தலம் அவ்வாறே வடிவமைக்கப்படுகிறது. ஒரு கோவிலின் கட்டமைப்பிலிருந்து, தூணில் இருக்கும் சிலைகள் வரை அனைத்தும் வேற்றுலகத்திற்குக் கொண்டு செல்லும். மாவீரர் நிகழ்வும் அதுபோன்றதே. ஈழத்தில் மாவீரர் நாள் கல்லறைகளின் நடுவே நடத்தப்படுகிறது. கல்லறைகள் என்பது சாதாரண உலகு அல்ல, மாவீரர்களின் ஆவிகள் உலவும் வேற்றுலகம். மக்கள் அங்கு மாவீரத் தெய்வங்களை வணங்கி அவர்களுடன் உரையாடும் இடம். அதனால் மாவீரர் நிகழ்வுகள் நடக்கும் இடம் என்பது சாதாரண இடம் போன்று தோற்றம் அளிக்கக்கூடாது. வேற்றுலகுடன் உரையாடும் இடம் என்பதால், வெட்ட வெளியில் திறந்த வானில் நடப்பது சிறப்பு. பூட்டிய இடங்களில் நடக்கிறது என்றால், கோவில்கள் போன்று உயர்ந்த கூரை உள்ள இடங்களில் நடத்தலாம். அல்லது புனிதமான இறைவழிபாட்டு இடங்களிலேயே நடத்தலாம்.

5. புனிதம் என்பது இருளை அகற்றி ஒளி வீசுவது. இது அல்லல்களை அகற்றி நன்மை ஏற்படுத்துவதற்கான உவமை. மாவீரர் நாள் என்பது இருட்டிய பின்னர் ஈகைச் சுடரொளியில் நடத்தப்படுகிறது. அனைத்துக் கோவில்களும் இருட்டாக ஒளிவிளக்குடன் மட்டும் இருப்பதற்கான காரணமும் இதுதான். அதனால் மாவீரர் நாள் நிகழ்வுகளை இருட்டில் சுடர் விளக்கில், கல்லறைகளின் நடுவே அப்படியே நடத்துவது சிறப்பு.

6. மாவீரர் நாள் என்பது வருடத்திற்கு ஒருமுறை வருவது. உணர்வுகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து தக்கவைக்க முடியாது என்பதால், தலைவர் காலத்தில் நடந்த பல புனித நிகழ்வுகளையும் அப்படியே நகலெடுக்கவேண்டும்.

7. புனிதம் என்பது மனிதனை ஆரம்ப காலத்திற்கு கொண்டு செல்வது என்பதால், நிகழ்வுகளில் போர்க்காலச் சூழல் எப்படி இருந்ததோ, அதே சூழலை உருவாக்கவேண்டும். தற்காலத்தை நினைவூட்டும் எதுவும் அங்கு இருக்கக்கூடாது.

8. புனிதம் என்பது மனிதனை நகலெடுத்துப் பின்பற்றத் தூண்டும். மக்கள் தலைவரின் குறிக்கோள்களைப் பின்பற்றி அவர்போல மன உறுதியுடனும் ஒழுக்கத்துடனும் செயல்படவேண்டும் என்றால், மக்களின் மனதில் அவர் புனிதம் என்று உணரவேண்டும், அவரை நினைத்தால் கண்களில் கண்ணீர் வரவேண்டும். அப்பொழுதுதான் மக்கள் அவரை நகலெடுப்பார்கள்.

நான் இவற்றைக் கூறுவது யாரையும் குற்றம் கூறுவதற்கு என்று தயவுசெய்து கருதவேண்டாம். எனது நோக்கம் அடுத்த தலைமுறைக்குச் சரியாக உணர்வுகளைக் கடத்தவேண்டும் என்பதே. இன்று பல்வேறு மாவீரர்கள் நிகழ்வுகள் தமிழகத்தில் நடத்தப்படுகின்றன. இது மேலும் பல்கிப்பெருக்கவேண்டும். அதே நேரம் மேலும் சிறப்பாகக் கொண்டு செல்ல மேற்கூறிய வழிகளை பின்பற்றலாம். பின்பருவற்றை தவிர்த்தால் சிறப்பு என நினைக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

1. தலைவர் புனிதமனாவர், ஈடு இணையற்றவர். அவருக்கு இணையாக மற்றத் தலைவர்களை வைக்கக்கூடாது. அப்படி வைப்பது என்பது அவரின் புனிதத்தைக் குறைப்பது. அடிப்படையில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு செய்யும் எதையும், அவருக்கு செய்யக்கூடாது.

2. மாவீரர் நாள் நிகழ்வுகள் அதே புனிதத்துடன் நடக்கவேண்டும். அதை மக்கள் மனதில் உணரவேண்டும். நிகழ்வின் அடிப்படை நோக்கம் என்பது உணர்வுகளை உருவாக்குவதே.

3. இனிவரும் காலத்தில் இது மக்களால் ஊர் ஊராக நடக்கவேண்டும். அதை அரசியல் சார்பற்ற பண்பாட்டு அமைப்புகளால் நடத்த வேண்டும். மாவீரர் நாள் என்பது அனைத்துத் தமிழரும் பங்கு பெரும் வகையில் நடத்தப்பட வேண்டும். ஒரு கட்சியின் சார்பில் நடத்தப்பட்டால், அக்கட்சியினர் மட்டுமே பங்கு பெறுவர். இது நமது வீச்சைச் சுருக்கும். ஈழத்தில் நடக்கும் மாவீரர் நிகவுகளில் அரசியல் கட்சிகள் ஒரு ஓரமாக நிற்கின்றன. அதுபோன்று மாறவேண்டும். நமது நோக்கம் என்பது அனைத்து தமிழரும் உளமார தலைவரை உள்வாங்க வைப்பதே. அது நடந்துவிட்டால் தமிழக அரசியல் என்பது தானாக மாறும். பண்பாடுதான் அரசியலை உருவாக்குகிறது. அதனால் பண்பாட்டு செயல்பாட்டில் வெற்றி பெறுவது அரசியல் வெற்றிக்கு அடிப்படை.

தரவுகள்: Eliade, Mircea. The sacred and the profane: The nature of religion. Vol. 81. Houghton Mifflin Harcourt, 1959
Rappaport. Ritual and Religion in the making of humanity

– ஆய்வாளர் கலாநிதி சேது இராமலிங்கம்
(நிழற்படங்கள் : குமணன் )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

share this blog -

Facebook
Twitter / X
WhatsApp
LinkedIn

share this blog -

error: Content is protected !!
Scroll to Top