கனடா-Brampton நகரசபையின் ஏற்புடன் தமிழீழத் தேசியக்கொடியேற்றுதல்

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே..!

உலகிலுள்ள அனைத்து நாடுகளின் கொடிகளை விடவும், தமிழீழத் தேசியக்கொடிக்கென்று நிகரில்லா மாண்பு இருக்கிறது. இனவிடியலை அடிப்படையாகக் கொண்டெழுந்த புதிய இயக்கமொன்று; தனது வரலாறு வழிவந்த அடையாளமான புலியையும், அதேவேளை; முன்னெப்போதுமில்லாதவாறு கருவியேந்திச் சமராடப்போகும் நிலையினை எடுத்துரைக்கும் வகையிலும் உருவாக்கிய கொடியே தமிழீழத் தேசியக்கொடியாகும்.

தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தை அறப்போர், ஆயுதப்போர் எனப் பாகுபாட்டோடு விளித்தலிலும் பார்க்க, “அறம் நிறைந்த ஆயுதப்போர்” என விளித்தலே  எமது போராட்டத்தின் அடிநாதத்தைத் தெளிவாக விளக்கும் சொல்லாடலாகும்.  தந்தை செல்வநாயகம் வரையிலான அறம் நிறை குருதி சிந்தாப் போராட்டம்; அறம் நிறை குருதிசிந்தும் போராட்டமாக பிரபாகரனால் மாற்றம் பெறுகிறது. அன்றைய இளைஞரான பிரபாகரன் முன்னெடுத்த அறம் நிறை குருதி சிந்தும் போராட்டமே சிங்கள இனத்திற்குப் புரியும் மொழியிலான போராட்டம் என்பதற்கு அப்பால்; எம்மினத்தைச் இன்றுவரை உயிர்ப்பில் வைத்திருக்கும் போராட்டமுமாகும்.

ஆகவேதான் சிங்கள இனத்திற்குப் புரியும் வழியிலான போராட்டத்தின் அடையாளமாக எமது தேசியக்கொடி விளங்குகிறது. தமிழீழத்தேசியக்கொடியின் எழுச்சியும், அதன்வழி எழுந்த புலிப்படையும் இன்றுவரை வரலாறுகளாக எம்மண்ணில் நிலைத்திருப்பதோடு மட்டுமன்றி, இனியும் எம்மை வழிநடத்தும் அடையாளங்களாகும். எமது இனத்திற்கென்று இருக்கும் ஒரேயொரு முழுமையான வரலாறு, “புலிவரலாறு” மட்டுமேயாகும். சோழர்காலம்  தொடங்கி பண்டாரவன்னியன் வரையிலாக எமது வரலாறு “இலக்கிய” வயப்பட்டு நிற்கிறதேயன்றி; அடையாளங்களுடன் கூடிய செய்திகள் நிரம்பிய வரலாறுகளாக எதுவுமே எம்மிடம் கிடையாது. திட்டமிட்டே அழிக்கப்பட்ட எம்மினத்தின் போர்வரலாறுகள் எம்மை யாரென்று அடையாளப்படுத்தவே இயலாத இனமாக மாற்றிவிட்டிருந்த வேளையிற்றான், “புலிவழிவரலாறு” தொடங்கிற்று.

அந்த வரலாறு எம்மைத் தமிழர்களாக மீளவும் தலைநிமிரச் செய்தது. குறிப்பாக உலகத்தமிழரிடையே,  “ஈழத்தமிழர்” எனும் பதம் பேசப்படலாயிற்று. ஆண்களும் பெண்களும், புலிகளாக மாறி எம்மண்ணில் நிகழ்த்திய வீரப்போர்கள் உலகெங்கும் பரவிற்று. சாதனைகளின் உச்சமாக ஈழத்தமிழர் அடையாளங்கள் மாறின. மாவீரர்கள் கொண்டாடப்படலாயினர். ஒழுக்கமும் விவேகமும் போர்க்குணமும் கொண்ட இனமாக, புலிக்கொடி எனும் தமிழீழத் தேசியக்கொடியின்கீழ் உலகத்தமிழர்கள் அணிவகுக்கத் தொடங்கினர். தமிழினத்தின் தலைவராக தேசியத்தலைவர் பிரபாகரன் நோக்கப்படலானார்.

மேற்கூறிய அனைத்திற்குமான ஒரே அடையாளமே எமது தமிழீழத் தேசியக்கொடியாகும். நான் யார் என்பதற்கான ஒரேயொரு அடையாளம் எமது தேசியக்கொடி மட்டுமேயாகும். அவ்வாறான எமது உயர்பண்பு கொண்ட தேசியக்கொடியை மேன்மைப்படுத்தும் பொருட்டு, தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டதே தமிழீழத் தேசியக்கொடி நாள் ஆகும்.

இந்த முழுமையான சொல்லாடலில் இருந்து விலகி, வேறுவிதமான சொல்லாடல்களைப் பயன்படுத்திக்கொண்டு, செய்திகளை எழுதும்போது மட்டும் “தமிழீழத் தேசியக்கொடி” என எழுதுவதானது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு அப்பால்; ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஏமாற்றும் செயலாகும்.  ஆதலால்; எம்மினத்தின் பெருமைமிகு அடையாளமான எமது தேசியக்கொடியை, அதன் முழுமையான விதந்துரைப்புகளோடு ஏற்றிப் பறைசாற்றுவதே எமது தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும், தமிழின அழிப்புப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் நாம் செலுத்தும் உயரிய மதிப்பளிப்பாகும்.

தமிழீழத் தேசியக்கொடியேற்றுதல் தொடர்பிலான Brampton நகரசபை முன்மொழிவு ஒன்றுகூடல் 19.11.2025 அன்று கனேடிய நேரப்படி காலை 9.30 மணியளவில் நிகழவிருக்கிறது. அவ்வொன்றுகூடலை கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் அன்றைய நாளில் காணவியலும்.

📍 Watch Live: www.brampton.ca/EN/City-Hall/meetings-agendas

அவ்வாறே;  கனடாவின் Brampton நகரில்  நகரபிதா Patrick Brown அவர்களது தலைமையில்,  எதிர்வரும் 21.11.2025 வெள்ளிக்கிழமை “தமிழீழத் தேசியக்கொடி நாள்” தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு நிகழ்விருக்கிறது.

எமது அமைப்பினால் (Voice Of Global Tamil Rights – உலகத்தமிழர் உரிமைக்குரல்) இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதோடு, Brampton நகரசபையின் அங்கீகாரத்தோடும் நிகழவிருக்கிறது என்பதை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பேருவகையோடு அறியத்தருகிறோம்.

அனைவரும் வருக,
கொடியேந்தி எழுக..!

குமுதினி குணரட்ணம்,
பேச்சாளர் மற்றும் ஊடகத் தொடர்பாளர்
உலகத்தமிழர் உரிமைக்குரல்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

share this blog -

Facebook
Twitter / X
WhatsApp
LinkedIn

share this blog -

error: Content is protected !!
Scroll to Top