நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரது அடுத்த நகர்வான மேன்முறையீடு பற்றிய அறிவுறுத்தல்.
“தவிபு களுக்கு நிதி திரட்டியது குற்றமல்ல, அது எமது உரிமை” என நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் தொடுத்த எதிர்மனுவின் மீது நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பானது (24.06.2022) ஓர் “நழுவல்” தீர்ப்பாகவே அமைந்திருந்தது.
2006 – 2009 காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தால் தவிபு களின்மீது மேற்கொள்ளப்பட்ட தடையும், அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் மீது ஏவிவிடப்பட்ட கைது நடவடிக்கைகளும் தவறென்பதை நிரூபிக்கும் வகையில் நாதன்தம்பி அவர்களால் ஆதாரங்கள் வழங்கப்பட்டபோதும், நீதிமன்றத்தீர்ப்பில் எம்மினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் காரணிகளை வெளிப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. வெறுமனே நிதிதிரட்டியவர்களுக்கான நன்னடத்தைப்பிணையோடு அவர்கள் விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டதானது தீர்ப்பு அல்ல, அது ஓர் நழுவல் போக்காகும். சுருங்கக் கூறின்; நடந்தது நடந்துவிட்டது ஆதலால் இத்துடன் அமைதியாக இருக்கவும் என்பதே நீதிமன்றத்தீர்ப்பின் சாராம்சமாகும்.
நாம் யேர்மனிய நீதிமன்றில் எமக்கு நீதி வழங்குமாறு கோரவில்லை. நீதிகோருதலும் ஓர்வகை மண்டியிடுதலே. தமிழினப்படுகொலையைத் தடுத்துநிறுத்த நாம் தவிபுகளுக்கு நிதி திரட்டியமையானது எமது உரிமை என வலியுறுத்தினோம். அதன்பால் தவிபுகளை யேர்மனிய அரசும் தடைசெய்து, ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து நின்று எம்மினத்தை அழித்தமையானது முற்றிலும் தவறானது. ஆதலால் குற்றம் உங்களதே, நீங்களே உங்களது சட்டங்களைத் தண்டிக்கவேண்டும் என்பதே எமது போராட்டத்தின் அடிப்படையாகும்.
ஆதலால்; நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் இணைந்து, தம்மீதான விசாரணையின்போது வழங்கப்பட்ட தீர்ப்பு மீதான மறுப்பை வெளிப்படுத்தும் விதமாக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர் என்பதை அறியத்தருகிறோம்.
இது நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா முன்னெடுக்கும் உயர்பரிமாணம் கொண்ட போராட்டமாகும். நாதன் தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோர் முன்னெடுக்கும் இந்த இனவிடுதளைப் போராட்டத்திற்கு உலகிலுள்ள அனைவரையும் தோள்கொடுக்க வருமாறு அழைக்கிறோம். நாதன் தம்பியும் ஆனந்தராசா அவர்களும் தனித்த மனிதர்களல்ல, புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசா ஆகியோரது முகங்களாகத் தம்மை அடையாளப்படுத்தவேண்டும்.
இது இனத்தின் இருப்பைப் பாதுகாக்கும் போராட்டம். இவ்வாறொரு போராட்டம் புலத்தில் இதுவரை நடந்ததுமில்லை, இனி நடக்கப்போவதுமில்லை. ஆதலால் அனைவரும் கரம்கோர்ப்போம்.